உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிராமத்தை காவல் காக்கும் பூதகன சுவாமி வழிபாடு

கிராமத்தை காவல் காக்கும் பூதகன சுவாமி வழிபாடு

மடத்துக்குளம்: காலத்தால் மிகவும் தொன்மை வாய்ந்த பூதகன வழிபாடு இன்றும் கிராமங்களில் நடக்கிறது. கிராம கோவில் வளாகங்களில், மிக பிரமாண்டமான தோற்றத்தில், கோபாவேசமாக கோரைபற்கள், பெரிய மீசையுடன், கையில் ஆயுதத்துடன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை பூதகனங்கள் என அழைக்கப்படுகிறது.

பூதகனங்கள் வழிபாடு இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து மக்களால் பின்பற்றப்படுகிறது. இலக்கியத்தில் முக்கிய இடம் பிடித்த பூம்புகார் நகரில், 28 நாட்கள் நடக்கும் இந்திர விழாவில், பூதகன வழிபாடு மிக சிறப்பானதாகும். பூம்புகாரில் ‘சதுக்கபூதம், அங்காடிபூதம்’ என்ற இருபூதங்களை தெய்வங்களாக வணங்கியுள்ளனர். மடித்தவாயும், தொங்கும் நாக்குமாக உருட்டி மிரட்டும் கண்களுடன், பயங்கர வடிவில் உள்ள இந்த சிலைகளுக்கு நெய்யில் சுட்ட பனியாரங்களும், எள் உருண்டைகளும் படையல் இடுவது வழக்கம்.  இந்த வழிபாட்டு தலத்தை ‘பூதசதுக்கம்’ என அழைத்தனர்.
 
பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு பூத சதுக்கத்தில் முறையீடு செய்கின்றனர். தவறு செய்தவர்களை பூதங்கள் தண்டிக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். மடத்துக்குளம் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில் வளாகங்களில், பூதகன சிலைகள் அமைக்கப்பட்டன. கோவிலையும், கிராமத்தையும் பூதகனங்கள் காவல் காப்பதாக பக்தர்கள் நம்பி வழிபடுகின்றனர். ‘குழந்தைகளிடம், தவறு செய்தால் சாமி தண்டிக்கும் என, பூதகன சிலைகளை சுட்டிக்காட்டுகின்றனர். தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என, அடிப்படை ஒழுக்கத்தை பதிய வைக்கின்றனர். இந்த நடைமுறை கிராம கோவில்களில் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது,’ என்கின்றனர் மடத்துக்குளம் மக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !