ஒறையூர் பாலமுருகன் கோவிலில் மிளகாய்பொடி அபிஷேகம்!
பண்ருட்டி:கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த, ஒறையூர் பாலமுருகன் கோவிலில், 25ம் ஆண்டு, பங்குனி உத்திர காவடி உற்சவம், நேற்று நடந்தது. கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, விநாயகர், பாலமுருகன் வீதியுலா நடந்தது. நேற்று காலை, 9 மணியளவில், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், பிற்பகல், 1.30 மணிக்கு மேல், 2.30 மணிக்குள், அவ்வை நதியில் இருந்து பால்குடம், தண்ணீர் வைத்து தேர் இழுத்து, பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பிற்பகல், 3.30 மணியளவில் ஊசி போடுதல், மிளகாய் பொடி அபிஷேகம், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்துதல், கயிர் செடல், ராட்டின செடல் உற்சவம், அலகு போடுதல், தாள்பூட்டு போடுதல், தேர் இழுத்தல், டயர் வண்டி, டிராக்டர் இழுத்து, பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மாலை, 6 மணியளவில், தீமிதி திருவிழா, இரவு உற்சவர் விநாயகர், பாலமுருகன், அம்மன் வீதியுலா நடந்தது.விழாவில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.