பவானி, பச்சைமலையில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா!
பவானி: பங்குனி உத்திர தேர்த்திருவிழா, பவானி ஸ்ரீவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவிலில் நடந்தது. இங்கு கடந்த 28ம் தேதி திருவிழா துவங்கி, வரும் எட்டாம் தேதி வரை நடக்கிறது. முருகப்பெருமானுக்கு நேற்று காலை பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணத்துக்குப்பின், முருகப்பெருமான், தேரில் பவனி வந்தார். பவானி எம்.எல்.ஏ., நாராயணன், நகராட்சி தலைவர் கருப்பணன், சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் நடராஜன், காசிவிஸ்வநாத சுவாமி கோவில் சுப்பிரமணியகுருக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
* கோபி அடுத்த பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரப்பெருவிழா, கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை, பக்தர்களின் பால்குடம் மற்றும் தீர்த்தக்குட அபிஷேகம் நடந்தது. காலை 8 மணி முதல் பச்சைமலை அடிவாரத்தில், பாலமுருகன் பங்குனி உத்திர அன்னதானக்குழு மற்றும் பச்சைமலை பாலகுமரன் பி.பி.குரூப்ஸ் சார்பில் அன்னதான நிகழ்ச்சியும், மாலையில் தேரோட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சிகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், ரமணிதரன், நகராட்சி தலைவர் ரேவதிதேவி, யூனியன் தலைவர் சத்யபாமா, தங்கம் பழனிசாமி, திருப்பணிக்குழு தலைவர் ஈஸ்வரன், அன்னதானக்குழு தலைவர்கள் கந்தசாமி, பிரகாஷ், ஒன்றிய செயலாளர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.