உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் சுடுமண் உறைகிணறு வைகைக் கரை நாகரிகத்தின் சான்று

பரமக்குடியில் சுடுமண் உறைகிணறு வைகைக் கரை நாகரிகத்தின் சான்று

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றங்கரையை ஒட்டிய  பகுதியில் வைகை கரை நாகரிகத்தை சேர்ந்த சுடுமண் உறை கிணறுகள்  கிடைத்துள்ளன.

தமிழகத்தில் 17 ஆற்றங்கரைகளில் பழங்கால நாகரிகம் இருந்துள்ளது.  மூலவைகை துவங்கி ராமநாதபுரம் மாவட்டம் வைகை கரையில் பழங்கால  நாகரிகத்துக்கான சான்றுகள் உள்ளன.

இந்நிலையில் பரமக்குடி அருகே பாம்புவிழுத்தான் கிராமம் ராக்கப்பெருமாள்  கோயில் திடலில் சில ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தங்கள் தேவைக்கு  அவ்வப்போது மண் பரப்பை சீர் செய்துஉள்ளனர்.

தற்போது பழங்கால சுடுமண் ஓடுகள் கிடைத்துள்ளன. இதைத் தொடர்ந்து கலையூரில் முதுமக்கள் தாழியை கண்டெடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர்  சரவணன், பாம்புவிழுந்தானில் சில மூன்று நாட்களாக ஆய்வு செய்தார்.

அதில் பானை ஓடுகள், எலும்புத் துண்டுகள், கீழடியில் கிடைத்ததை போன்று ஒரு  அடி அகலம், ஒன்றரை அடி நீளம் கொண்ட செங்கல் ஆகியவை கிடைத்தன. கருவேலமரங்க ளுக்கு இடையே சுடுமண் உறைகிணறையும் இளைஞர்களுடன்  இணைந்து மீட்டுள்ளார்.

வட்ட வடிவிலான இந்த கிணற்றில் ஒவ்வொரு உறைக்கும் மேல்பகுதி  உடையாமல் இருக்க தடிமனாக உள்ளன. தற்போது 5 அடி பள்ளம் தோண்டப்பட்ட  நிலையில் 4 உறைகள் தெரி கின்றன. மேலும் ஆய்வு செய்யும் நிலையில் இங்கு  பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பரமக்குடி பகுதியில் பருத்தியை தேடி ஐரோப்பியர்கள், கிரேக்கர்கள்  வந்திருக்கலாம் என கலையூரில் ஆய்வு மேற்கொண்ட கடல்சார் தமிழியல்  ஆய்வாளர் பாலு தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக கீழடியை போன்றே  பரமக்குடி வைகை ஆற்றங்கரைகளில் தொல்லி யல் ஆய்வு மேற்கொண்டால்  பழங்கால நாகரிகம் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !