திருச்சி முருகன் கோவில்களில் பூக்குழி இறங்கி பக்தர் பரவசம்!
திருச்சி: திருச்சி வயலூர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர நாளான நேற்று அதிகாலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடி எடுத்தனர். பல்வேறு வகையான அலகுகளை குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். "கந்தனுக்கு அரோகரா; முருகனுக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பியபடி, முருகன் கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பால், பன்னீரை கொண்டு, முருகனுக்கு காலை எட்டு மணி முதல் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 10 மணிக்கு, சிங்கார வேலர் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தார். இன்று (6ம் தேதி) உபய அபிஷேகங்கள் நடக்கிறது. நாளை (7ம் தேதி), தினைப்புனம்காத்தல் விழாவும், மறுநாள் (8ம் தேதி), முருகப்பெருமான் வேலன், வேடன் விருத்தனாக வருதல், யானை விரட்டல் காட்சியும், 9ம் தேதி காலை 9 மணிக்கு, வள்ளித்திருக்கல்யாணம் நடக்கிறது.
* தீமிதி திருவிழா: திருவானைக்காவல் மேலகொண்டயம்பேட்டையில் உள்ள பாலசுப்ரமணியர் கோவிலுக்கு, பல்வேறு வகையான அலகுகளை போட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இவர்கள் கொண்டு சென்ற பால் காவடிகள் அபிஷேகம் செய்யப்பட்டன. ஊர்வலமாக சென்ற பக்தர்கள் கோவிலுக்கு முன் "பூமிதியில் (தீ மிதித்தல்) நடந்து சென்றது பார்ப்போரை பரவசம் அடைய செய்தது.
*பூக்குழி: இதேபோன்று லால்குடி அருகே மேலவாளாடி பாலமுருகன் கோவிலில் நேற்று மாலை பூக்குழி இறங்குதல் வைபவம் சிறப்பாக நடந்தது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் வெகு சிறப்பாக பங்குனி உத்திர திருவிழா நடந்தது.