கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்!
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். பிரசித்தி பெற்ற கரூர் அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு பங்குனி திருவிழா கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் நந்தி, பூதம், ரிஷபம், கயிலாயம் போன்ற வாகனத்தில் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 3 ம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக கோவிலில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. இன்று காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று ( 6ம் தேதி) நடராஜமூர்த்திக்கு அபிஷேகம், தீர்த்தவாரியும், நாளை (7ம் தேதி) விடையாற்றி உற்சவம் ஆளும் பல்லாக்கும், 8ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. வரும் 9 ம் தேதி பிராயச்சித்த அபிஷேகம், சண்டிகேஸ்வரர் வீதி உலாவுடன் நிறைவடைகிறது. நாள் தோறும் காலை 8.30 மணியிலிருந்து இரவு 7 மணி வரை ஸ்வாமி வீதி உலாவும், விழா தினங்களில் மாலை திருமுறைப் பாராயணமும், சொற்பொழிவும், இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
* புகழிமலை ஸ்ரீபாலசுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. விழாவில் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக உச்சிப்பிள்ளையார் முதல் மலையின் மீதுள்ள மீனாட்சி, சுந்தரேஸ்வரர், துர்க்கை, நடராஜர், நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு ஸ்ரீ பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு பல்வேறு திரவிய பொருட்கள் மூலம் அபிஷேகம், விசேஷகால பூஜை நடந்தது. பக்தர்களுக்கு காந்தி திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பங்குனி உத்திரவிழா குழுவினர்கள், சோழிய வெள்ளாளர் சமூகத்தினர் செய்திருந்தனர்.