குன்னுார் சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழா
குன்னுார்:குன்னுார் எடப்பள்ளி ஷீரடி சாய்பாபா கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, சண்டி ஹோமம் நடந்து வருகிறது.குன்னுார் எடப்பள்ளி ஷீரடி சாய்பாபா கோவிலில் நவராத் திரி விழா கடந்த, 29ம் தேதி துவங்கியது. இதில், வைக்கோல், மூங்கில், மண் ஆகியவற்றால் கோல்கட்டாவை சேர்ந்தவர்கள் உருவாக்கிய, மகிஷனை வதம் செய்யும் துர்கா உட்பட பல்வேறு சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது.
தினமும் சண்டி ஹோமம், சண்டி பாராயணம், வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள தேவி மந்திர் ஆஸ்ரம சுவாமிஜி ஸ்ரீமா, சக்தியானந்த சரஸ்வதி தலைமையில், நாள் தோறும், 13 மணி நேரம் வரை தொடர்ந்து சண்டி பாராயணம், 9 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, 8ம் தேதி ஆயுத பூஜை, சாய் பாபாவின் சமாதி தின நிகழ்ச்சிகள், வழிபாடு நடக்கிறது.
எடபள்ளி சாய்பாபா தர்மஸ்தலா சுவாமினி சக்திமா, சுவாமிஜி நந்துபாபா கூறுகையில், ”விநாயகரின் லட்சியம், லட்சுமியின் கடாட்சம், சரஸ்வதியின் ஞானம், கார்த்திகேயனின் தடைகளை தகர்த்தல் போன்றவற்றுடன், மக்களிடையே கஷ்டம், பாரம், தடை, மனச்சுமை போன்ற அரக்கனை, துர்கையின் அனுகிரகத்தால் விரட்டுவதே துர்கா பூஜையின் நோக்கம்,” என்றார்.