சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி மஹா சண்டிஹோமம்
ADDED :2232 days ago
புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, உலக நன்மை வேண்டி மஹா சண்டி ஹோமம் நடந்தது.புதுச்சேரி, எல்லப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில், 45ம் ஆண்டு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி, உலக நன்மை மற்றும் அமைதி வேண்டி, சிறப்பு ஹோமங்கள் கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது. அன்று யாகசாலை பிரவேசம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மகா கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம் நடந்தது.
நேற்று, உலக நன்மை, அமைதி வேண்டி மஹா சண்டி ஹோமம், காலை 7:30 மணி முதல் பகல் 1:30 மணி வரை நடந்தது. திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். மாலை, ஆண்டாள் நாச்சியார் இசைப்பிரிவு மாணவர்களின் இசை அமுதம் நிகழ்ச்சி், ஜெகதீசன் குழுவினரின் பாட்டு, இரவு சரவணன் அருள் நாட்டியாலயாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இன்று, 8ம் தேதி ஊஞ்சல் உற்சவம், சாமி புறப்பாடு நடக்கிறது. விழாவையொட்டி, கடந்த மாதம் 28ம் தேதி முதல் தினந்தோறும் இரவு மந்தரபஷ்பமாலா தீபாராதனை, நவராத்திரி இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்து வந்தது.