ஏழுமலையான் பிரம்மோற்சவம் நிறைவு
திருப்பதி, : திருமலையில் நடந்து வந்த ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம், நேற்று தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. திருமலையில், கடந்த மாதம், 30ல், வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்தது. தினமும் காலையும், இரவும், மலையப்ப ஸ்வாமி பல்வேறு வாகனங்களில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த, எட்டு நாட்களாக நடந்து வந்த பிரம்மோற்சவம் நேற்று காலை, தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
இதை முன்னிட்டு, நேற்று காலை, ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமி மற்றும் சக்கரத்தாழ்வார், தங்க பல்லக்கில், திருக்குளத்தை ஒட்டியுள்ள வராக ஸ்வாமி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது லட்சகணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர். அதன்பின் உற்சவமூர்த்திகள் மீண்டும் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். திருமலையில், வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதற்கு அடையாளமாக, முப்பத்து முக்கோடி தேவர்களை வரவேற்க ஏற்றப்பட்ட கருடகொடி இறக்கப்பட்டது. அதற்குமுன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமி தங்க பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தனர்.