உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடரமண சுவாமிக்கு ஒத்த செருப்பு காணிக்கை!

வெங்கடரமண சுவாமிக்கு ஒத்த செருப்பு காணிக்கை!

கரூர் : தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு, பெரிய அளவிலான, ஒத்த செருப்பை, பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, காணிக்கை செலுத்தினர்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில், வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், தேர்த் திருவிழா நடக்கிறது. அப்போது பக்தர்கள், பல்வேறு பொருட்களை, சுவாமிக்கு காணிக்கையாக வழங்குவர். அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், சின்னதம்பிபாளையத்தை சேர்ந்த பக்தர்கள், சம்மாளி என்ற ஒத்த செருப்பை தயார் செய்து, தான்தோன்றிமலை வெங்கட ரமண சுவாமிக்கு, ஆண்டுதோறும் காணிக்கையாக கொடுத்து வருகின்றனர்.


நடப்பாண்டு, பெரிய அளவிலான, ஒரு செருப்பை, 30க்கும் மேற்பட்ட பக்தர்கள், தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக, திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு, நேற்று முன்தினம் மாலை, கரூர் வந்தனர். இதுகுறித்து, சின்ன தம்பிபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி கூறியதாவது:கடந்த ஆண்டு, என் கனவில், வெங்கடரமண சுவாமி வந்து, செருப்பு காணிக்கை வழங்க உத்தரவிட்டார். அதன்படி, பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து, அதை செய்தோம்.இந்த ஆண்டு, நாகராஜ் என்பவரின் கனவில், சுவாமி வந்து, செருப்பு தைக்க தோல் கிடைக்கும் ஊரின் பெயரையும் கூறியுள்ளார். வரும், 12ல், கரூர் தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில் பூஜை செய்து, செருப்பை காணிக்கையாக வழங்குகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !