மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) தாராள பணவரவு 70/100
ஆர்வமுடன் செயல்பட்டு வெற்றி பெறும் மேஷராசி அன்பர்களே!
நந்தன புத்தாண்டில் பிரதான கிரகங்களில் குருபகவான் வருடம் முழுவதும் ராசிக்கு இரண்டில் அமர்ந்து நற்பலன்களை வழங்குகிறார். சனிபகவான் தன் பங்கிற்கு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சிறப்பான பலன் தரும் வகையில் உள்ளார். எண்ணத்திலும் செயலிலும் விவேகம் கலந்திருக்கும். தம்பி, தங்கைகள் உங்களின் உதவியை நாடி வருவர். வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பைப் பின்பற்றுவது நல்லது. தாய்வழி உறவினர்களிடம் கருத்துவேறுபாடு உண்டாகும். புத்திரர் உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பர். கல்வி, வேலைவாய்ப்பில்முன்னேற்றம்காண்பர். குலதெய்வ அருள் துணை நின்று உதவும். பூர்வ சொத்தில் எதிர்பார்த்த அளவில் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். வருட முற்பகுதியில் எதிரி பயந்து விலகுவதும் வருட பிற்பகுதியில் அவர்களின் செயலை சமயோசிதமாக முறியடிப்பதுமான நிலை இருக்கும். உடல்நலக்குறைவு நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். கடன் தொல்லை சரியாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குடும்பத்தில் ஒற்றுமையை நிலைக்கச் செய்வர். செப்டம்பர் முதல் மார்ச் வரை அவ்வப்போது குடும்பத்தில் சச்சரவு ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. நண்பர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு உருவாகும். அதன்மூலம் தாராள லாபமும், புகழும் உண்டாகும். மூத்த சகோதரர்களின் ஆலோசனையால் நன்மை உண்டாகும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: தொழிலில் புதிய வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி உற்பத்தியை உயர்த்துவர். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். லாபம் பன்மடங்கு அதிகரிப்பதால் சேமிக்க இடமுண்டு. சமூகசேவையில் ஆர்வமுடன் ஈடுபடுவர். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தங்களில் அக்கறை உண்டாகும்.
வியாபாரிகள்: மூலதனத்தை அதிகரித்து விற்பனையில் நல்ல முன்னேற்றம் காண்பர். லாபவிகிதம் முன்பை விட கூடும். சரக்கு இருப்பு வைக்க கூடுதல் இடங்களை ஏற்பாடு செய்வீர்கள். வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவர்.
பணியாளர்கள்: பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி பணியிலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். சலுகைப்பயன் படிப்படியாகக் கிடைக்கும். சம்பள உயர்வு திருப்திகரமாக அமையும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் புதிய நுட்பங்களை பயன்படுத்தி பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். பதவி உயர்வு, சலுகை எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் விருப்பமறிந்து செயல்படுவது நல்லது. தாய்வழி சீர்முறைகளைக் கேட்டுப்பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி உற்பத்தியை அதிகரிப்பர்.
மாணவர்கள்: மாணவர்கள் ஒருமுகத்தன்மையோடு படித்தால் மட்டுமே எதிர்பார்த்த தரத்தேர்ச்சி கிடைக்கும். படிப்புக்கான பணவசதி பெறுவதில் சிரமம் இருக்காது. சாகச விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. சக மாணவர்களிடம் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: சமூகப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரியால் உண்டாகும் தொல்லைகளை தகுந்த எதிர்நடவடிக்கையால் சரிசெய்வீர்கள். அரசியல் பணிக்கு புத்திரர் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வர். வெளியூர் பயணத்தின் மூலம் நல்ல அனுபவமும் புதியவர்களின் தொடர்பும் கிடைக்கும்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். மகசூல் சிறந்து தாராள பணவரவைப் பெற்றுத்தரும். கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் உண்டு. நிலம் தொடர்பான பிரச்னை இருந்தால் வருட முற்பகுதியில் நல்ல தீர்வு கிடைக்கும்.
பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் தொழில் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும்.