மிதுனம் (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) - வீட்டில் விசேஷங்க 65/100
வாழ்வில் திட்டமிட்டுச் செயலாற்றும் மிதுனராசி அன்பர்களே!
புத்தாண்டில் பிரதான கிரகங்களில் ராகு, கார்த்திகை மாதம் வரையிலும் கேது கார்த்திகை முதல் பங்குனி வரையிலும்(டிசம்பர்-மார்ச்) அளப்பரிய நற்பலன்களை சிறப்பாக வழங்குவர். குரு, சனிபகவானின் அமர்வு உங்கள் வாழ்வில் சில சிரமங்களை எதிர்கொள்ள வைக்கும். மனஉறுதி, புத்தி சாதுர்யத்துடன் செயல்படுவதால் சிரமங்களை பெருமளவில் சரிசெய்யலாம். இடம், பொருள் அறிந்து பேசுவதால் நற்பெயரும் புகழும் தொடர்ந்திடும். சமூகப்பணியில் இருந்த ஆர்வம் குறையும். வீட்டில் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவதால் விபத்து அணுகாத நல்வாழ்வு பெறுவீர்கள். புத்திரர் பிடிவாத குணங்களுடன் செயல்படுகிற கிரக சூழ்நிலை உள்ளது. எதிரியினால் வரும் தொல்லையிலிருந்து விடுதலை காண்பீர்கள். நிலுவைக் கடன் ஓரளவு அடைபடும். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திட்டமிட்டபடி வீட்டில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை தாராள பணச்செலவில் வாங்குவீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து குடும்பஒற்றுமையை நிலைநாட்டுவர்.குடும்பத்தில் குதூகலமும், நிம்மதியும் நிலைத்திருக்கும். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். சேமிப்பு உயரும். மூத்த சகோதரர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுத்துவீர்கள்.
தொழிலதிபர்கள்: தொழிலதிபர்கள் விறுவிறுப்பாகச் செயல்பட்டு நல்ல வளர்ச்சி காண்பர். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு சீராக கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு லாபத்தை உயர்த்துவர். விரிவாக்க முயற்சி, உபதொழில் தொடங்குதல் போன்றவற்றில் வெற்றி காண்பர்.
வியாபாரிகள்: வியாபாரிகள் கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர முயற்சிப்பர். முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் லாபம் உயரும். வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று வர நேரிடும். பழைய கடன் ஓரளவு அடைபடும். சகவியாபாரிகளின் மத்தியில் செல்வாக்கு உயரும்.
பணியாளர்கள்: பணியாளர்கள் உத்வேகமுடன் செயல்பட்டு பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. வீடு கட்டவும், வாகனம் வாங்கவும் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். நிர்வாக அதிகாரிகளிடம் நற்பெயர் காண்பர். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி இலக்கை நிறைவேற்றுவர். கடந்த காலத்தில் இருந்த அவப்பெயர் விலகி நன்மதிப்பு உண்டாகும். புதிய பதவி, பொறுப்பு அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். குடும்ப பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கான பணம் தாராளமாக கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் ஆலோசனையால் புதிய சந்தை வாய்ப்பு கிடைக்கப்பெறுவர்.
மாணவர்கள்: மாணவர்கள் படிப்பில் ஞாபகத்திறன் வளர்ச்சி பெற்று கல்வியில் வளர்ச்சி காண்பர். கல்விச் செலவுக்கான பணம் சீராக கிடைக்கும். வீண்செலவைக் குறைத்துக் கொள்வது அவசியம். நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுமுயற்சியில் ஈடுபடுவர். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.
அரசியல்வாதிகள்: சித்திரை முதல் கார்த்திகை மாதம் வரை (ஏப்ரல்-டிசம்பர்) உங்களின் அரசியல்பணியால் சமூகத்தில் நல்ல வரவேற்பைக் காண்பீர்கள். ஆதரவாளர்களின் ஆதரவைக் கண்டு புதிய உத்வேகம் உண்டாகும். எதிரிகள் பலமிழந்து விலகிச் செல்வர். எதிர்பார்த்த பதவி, புதிய பொறுப்பு அதிர்ஷ்டகரமான வகையில் கிடைக்கும். புத்திரர்கள் அரசியல் பணிக்கு ஓரளவு துணை நிற்பர்.
விவசாயிகள்: விவசாயப் பணிகள் சீராக நிறைவேறும். விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்று லாபம் காண்பர். கால்நடைமூலம் கிடைக்கும் ஆதாயம் குடும்பச் செலவிற்கு உதவும். நவீன உழவுக்கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். நிலம் தொடர்பான பிரச்னைகளில் சமரச போக்கை கையாளுவது நல்லது.
பரிகாரம்: சிவனை வழிபடுவதால் தொழில் முன்னேற்றமும், நல்ல லாபமும் உண்டாகும்.