கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) - பிள்ளைகளால் பெருமை 70/100
வயதில் குறைந்தவருக்கும் மரியாதை தருகிற கன்னிராசி அன்பர்களே!
புத்தாண்டில் பிரதான கிரகங்களில் குருபகவான் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் அமர்ந்து வருடம் முழுவதும் நற்பலன் வழங்குகிறார். சித்திரை முதல் கார்த்திகை மாதம் வரை (ஏப்ரல்-டிசம்பர்) ராகு ராசிக்கு மூன்றில் இருந்து சிறந்த பலன் தருகிறார். மனதில் உற்சாகமும் செயல்களில் சுறுசுறுப்பும் சேர்ப்பதால் வெற்றி இலக்கு நிறைவேறும். இடம், பொருள் அறிந்து பேசுவதால் நன்மை கிடைக்கும். புத்திரர் உங்கள் சொல் கேட்டு நடந்து நல்ல பிள்ளை என பெயர் பெறுவர். படிப்பிலும் சிறந்து விளங்குவர். வழக்கு, விவகாரங்களில் சமரச பேச்சின் மூலம் தீர்வுபெற முயற்சிப்பது நல்லது. உடல்நல ஆரோக்கியத்திற்கு தகுந்த சிகிச்சை, காலமுறை உணவுப்பழக்கம் உதவும். இஷ்ட, குலதெய்வ வழிபாடுகளை தாராள பணச்செலவில் மனமுவந்து நிறைவேற்றுவீர்கள். தம்பதியர் குடும்பத்தின் எதிர்கால நலன் சிறக்க ஒருவருக்கொருவர் அக்கறையுடன் பாடுபடுவர். ஆடை, ஆபரணம், முக்கிய வீட்டு சாதனம் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உற்ற துணையாக செயல்படுவர். புதிய திட்டங்களை உருவாக்கி, திறமையுடன் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சியை நிறைவேற்ற சிறு அளவில் கடன் பெறுவீர்கள்.
தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் முழு கவனத்துடன் செயல்படுவதால் மட்டுமே குறைபாடு வராத நிலைமை இருக்கும். புரட்டாசி முதல் பங்குனி (அக்டோபர்-மார்ச்)வரை தொழில் சிறந்து, அதிக பணவரவு கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி பெற தேவையான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உற்பத்தி மற்றும் தரம் படிப்படியாக வளர்ந்து நன்மதிப்பையும் கூடுதல் பணவரவையும் பெற்றுத்தரும். தொழில் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும். சமூக அந்தஸ்து உயரும். உபதொழில் துவங்குகிற முயற்சி சிறப்பாக நிறைவேறும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டு.
வியாபாரிகள்: கடந்த காலங்களில் வாடிக்கை யாளர்களிடம் பெற்ற நற்பெயரை பலமாகக் கொண்டு செயல்படுவர். சந்தையில் வரவேற்பு கூடி விற்பனை அதிகரிக்கும். உபரி வருமானம் உண்டு. புதிய கிளை துவங்குவதற்கான அனுகூலம் வளரும்.
பணியாளர்கள்: பணியாளர்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக பணியாளர்களை மதித்து நடந்து கூடுதல் அன்பை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்.. தாராள சம்பளம் கிடைக்கும். குடும்பத்தின் தேவை பெருமளவில் நிறைவேறும். சுற்றுலா பயணம் மேற்கொள்வீர்கள்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். தாமதமான பதவி உயர்வு, சலுகை கிடைக்கும். குடும்பப் பெண்கள் எதிர்கால தேவைகளை நிறைவேற்ற லட்சிய மனப்பாங்குடன் செயல்படுவர். கணவரின் அன்பும் ஆதரவும் துணைநிற்கும். தாய்வீட்டு சீர்முறை திருப்திகரமாக கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் உயர்ந்த இலக்கை எட்டுவர். உபரி வருமானத்தில் கூடுதல் கருவி வாங்க அனுகூலம் உள்ளது. இளம் பெண்களுக்கு குருவருளால் நல்ல வரன் கிடைக்கும்.
மாணவர்கள்: மாணவர்கள் படிப்பில் ஞாபகத்திறன் வளர்த்து சிறந்த தேர்ச்சி பெறுவர். வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். சக மாணவர்களின் உதவி கிடைத்து மனம் நெகிழ்வீர்கள். பரிசு, பாராட்டு பெறுகிற நல்யோகம் உண்டு. செலவில் சிக்கனம் தேவை.
அரசியல்வாதிகள்: அரசியல்பணியில் கடந்த காலத்தில் எதிர்கொண்ட சிரமங்களை மனதில் கொண்டு செயல்படுவீர்கள். புதிய பதவி, பொறுப்புகளைப் பெற விரும்பிய லட்சிய நோக்கம் நிறைவேறும். ஆதரவாளர்களின் நம்பிக்கையை கூடுதலாக பெறுவீர்கள். அரசிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும்.
விவசாயிகள்: கவனமாகச் செயல்பட்டு உற்பத்தியை பெருக்குவர். பயிர்களுக்கு தாராள விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் உண்டு. கூடுதல் சொத்து சேர்க்கை கிடைக்கும்.
பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் தொழிலில் நன்மை அதிகரிக்கும்.