துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) - விடாமுயற்சி தேவை 60/100
பெரியவர்களை மதிப்புடன் நடத்தும் துலாம் ராசி அன்பர்களே!
புத்தாண்டில் பிரதான கிரகங்களில் குரு, சனி, ராகு, கேது ஒருவர் கூட அனுகூல பலன் தருகிற இடங்களில் அமர்வுபெறவில்லை. குருபகவானின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக மட்டும் நன்மை உண்டாகும். விடாமுயற்சியும், கடமையுணர்வும் வெற்றிக்கு வழிவகுக்கும். குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை ஓரளவே நிறைவேற்ற முடியும். பொது விஷயங்களில் ஈடுபடும்போது முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. பிறரை வாழ்த்துகிற சூழ்நிலையை விட கண்டிக்கிற சூழ்நிலையே அதிகம் இருக்கும். பொறுமை காப்பதால் வாழ்வில் நிம்மதி உண்டாகும். வீடு, வாகனத்தில் கிடைக்கிற வசதியை தக்க வைத்துக் கொள்ளுங்கள். தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். புத்திரர் படிப்பில் சிறந்து வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை காண்பர். இஷ்ட, குலதெய்வ அருள் வாழ்வில் துணைநிற்கும். சிலருக்கு சொத்து ஆவணங்களின் பேரில் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தேவையைத் திட்டமிட்டுச் செய்வதன் மூலம் கடன் சுமையைக் கட்டுப்படுத்த முடியும். உடல் ஆரோக்கியம் சீர்கெட வாய்ப்புண்டு. தகுந்த மருத்துவ ஆலோசனையை பெற்று சரிசெய்வீர்கள். எதிரியால் ஏற்படும் தொல்லையால் மனவருத்தம் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் வராது. உறவினர்கள் பலர் சுயநல நோக்குடன் உங்களைச் சுற்றித் திரிவர். கணவர் மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்தால் மட்டுமே குடும்பத்தில் பிரிவு ஏதும் வராமல் தவிர்க்கலாம்.தொழில் சார்ந்த வகையில் இருக்கிற பணி தாமதங்களை சரிசெய்வதால் மட்டுமே தொழில் சிறக்கும். மிதமான வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் ஒழுங்கு நடவடிக்கை, பணி நீக்கம் போன்ற எதிர்மறை பலன்களை சந்திக்க நேரிடலாம். கவனம்.
தொழிலதிபர்கள்: தங்கள் தொழிலில் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே பணி தாமதமின்றி நிறைவேறும். புதிய ஒப்பந்தங்களைப் பெற கடின முயற்சிதேவைப்படும். உற்பத்தி, தரத்தை உயர்த்துவதால் லாபம் அதிகரிக்க வாய்ப்புண்டு. தொழில் கூட்டமைப்பில் கிடைத்த பொறுப்பின் மூலம் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.
வியாபாரிகள்: தரமான பொருட்களை விற்பனை செய்தாலும் வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். சாதுர்யமாக செயல்பட்டு லாபத்தை அதிகரிக்க முயற்சிப்பர். கூடுமான வரை ரொக்கத்திற்கு விற்பது நல்லது. மாற்றுத்தொழில், விரிவாக்க முயற்சிகளை இந்த ஆண்டு தவிர்ப்பது நல்லது. அடிக்கடி வெளியூர் பயணம் சென்றுவருவர்.
பணியாளர்கள்: பணியாளர்கள் பணிச்சுமை காரணமாக அடிக்கடி உடல்சோர்வுக்கு ஆளாவர். அதிகாரிகளின் அடக்குமுறைக்கு அடிபணிய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். செலவில் சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. சிலநேரங்களில் பணியாளர்கள் குளறுபடியை எதிர்கொள்வர்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் அவதிப்படுவர். பொறுமையுடன் செயல்படுவதால் உரிய தருணத்தில் பதவி உயர்வு, சலுகை ஆகிய நற்பலன் வந்துசேரும். குடும்ப பெண்கள் கணவரிடம் தேவையற்ற வாக்குவாதம் தவிர்ப்பதால் மட்டுமே மனநிம்மதியைப் பெறலாம். சுயதொழில் புரியும் பெண்கள் கடின உழைப்பின் மூலம் மிதமான லாபம் காண்பர்.
மாணவர்கள்: மாணவர்கள் ஆசிரியரின் நல்ல அன்பு, வழிகாட்டுதல் கிடைத்து படிப்பில் கூடுதல் தேர்ச்சிவிகிதம் பெறுவர். படிப்புக்கான பணவசதி சுமாரான அளவில் கிடைக்கும். ஆடம்பரச் செயல்களை குறைத்துக்கொள்வதால் சிரமம் அணுகாமல் தவிர்க்கலாம். சக மாணவர்களிடம் தன் குறை சொல்வதும் அவர் குறை கண்டிப்பதும் கூடாது.
அரசியல்வாதிகள்: கடந்த காலங்களில் கிடைத்த நற்பெயரை பாதுகாக்கிற எண்ணத்துடன் செயல்படுவது நல்லது. ஆதரவாளர் அதிக எதிர்பார்ப்புடன் நடந்துகொள்வர். அரசு அதிகாரிக ளிடம் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். சில சமயங்களில் எதிரி தொல்லையை சமாளிக்க முடியாமல் போராட நேரிடும்.
விவசாயிகள்: விவசாயப்பணிகளை நிறைவேற்ற தேவையான பணம் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கும். கால்நடைகளின் மூலம் சுமாரான லாபம் உண்டு.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் நீங்கி அனுகூலம் உண்டாகும்.