நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை
வீரபாண்டி: சீரகாபாடி, காவகிரி பெருமாள் கோவிலில், புரட்டாசி தேரோட்ட திருவிழா, 10 நாள் நடக்கும். கடந்த, 11ல், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம், 12ல், தேரோட்டம் நடந்தது. நேற்று, உலக நன்மை வேண்டி நடந்த திருவிளக்கு பூஜையில், சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பெண்கள் பங்கேற்றனர். இதையொட்டி, மலைமேல் உள்ள மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள், மலை அடிவாரத்திலுள்ள உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டு வைபவத்துடன், தேரோட்ட விழா நிறைவடையும்.
பவுர்ணமி: புரட்டாசி பவுர்ணமியான நேற்று, உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், மூலவர் பெரியநாயகி அம்மன், உற்சவர் மனோன்மணியம்மனுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவரை, மரத்தேரில் எழுந்தருளச்செய்து, திரளான பக்தர்கள், ஓம்சக்தி பராசக்தி கோஷம் முழங்க, தேரை வடம் பிடித்து இழுத்து, கோவிலை வலம் வந்தனர்.