உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுசு (மூலம், பூராடம், உத்திராடம்1) - வருமானம் உயரும் 65/100

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம்1) - வருமானம் உயரும் 65/100

அனைவரிடமும் பாசமுடன் நடக்கும் தனுசுராசி அன்பர்களே!

புத்தாண்டில் பிரதான கிரகங்களில் கேது கார்த்திகை மாதம்(டிசம்பர்) வரையிலும் ராகு கார்த்திகை முதல் பங்குனி வரையிலும்(டிசம்பர்-மார்ச்) நல்ல இடங்களில் உள்ளனர். சனிபகவான் ஆவணிக்கு(ஆகஸ்ட்) மேல் ஆண்டு முழுவதும் ஆதாய பலன்களை அள்ளி வழங்குவார். குருவின் பார்வை பெறுகிற ஸ்தானங்களின் வழியாகவும் நன்மை பெறுவீர்கள். இடம், பொருள் அறிந்து பேசி பெருமளவில் காரியம் சாதிப்பீர்கள். தம்பி, தங்கை அன்புடன் நடந்து கொள்வர். சமூக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதில் ஆர்வம் உண்டாகும். சமூகத்தில் கவுரவம் மிக்க மனிதராக வலம் வருவீர்கள். கவலை நீங்கி வாழ்வில் நம்பிக்கை பிறக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற திட்டம் நிறைவேறும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றி அவருடைய அன்பு, ஆசியைப் பெறுவீர்கள். இஷ்ட, குலதெய்வ அருள் எப்போதும் உங்களைக் காத்து நிற்கும். புத்திரர் நல்ல குணங்களை பின்பற்றி படிப்பில் முன்னேற்றம் காண்பதோடு வேலைவாய்ப்பிலும் அனுகூலம் காண்பர். பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானம் கூடும். உடல்நலக் குறைவு அவ்வப்போது தலைதூக்கும் கவனம். எதிரியிடம் விலகி செயல்படுவது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளை தாராள பணச் செலவில் நிறைவேறும். தம்பதியர், ஒருவர் செயலை ஒருவர் புரிந்து கொள்ளாமல் நடக்கும் சூழ்நிலை உருவாகும். சுபவிஷயம்குறித்தபேச்சுவார்த்தை வீட்டில் அடிக்கடி நடக்கும். தொழில் சார்ந்த வகையில் வருட துவக்கத்தில் மந்தகதியும் சனி பெயர்ச்சிக்குப் பிறகு வளர்ச்சிநிலையும் உருவாகும். ஆதாய பணவரவை சேமிப்பாக மாற்றுவீர்கள். மூத்த சகோதரருக்கு தேவையான உதவியை செய்ய முன்வருவீர்கள். வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

தொழிலதிபர்கள்:  தொழிலில் மூலதனத்தை அதிகப்படுத்தி வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி தரத்தின் அளவு உயரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலம் வருமானம் உயரும். சமூகப்பணியிலும் ஆர்வம் வளரும். சக தொழில் சார்ந்த நண்பர்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொள்வர். அரசிடம் எதிர்பார்த்த உதவி வருட பிற்பகுதியில் கிடைக்கும்.

வியாபாரிகள்: வியாபார நடைமுறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வாடிக்கையாளரைக் கவர்வர். விற்பனையில் நல்ல முன்னேற்றமும், ஆதாயமும் கூடும். சக வியாபாரிகளின் உதவியால் புதிய கொள்முதல் இடங்களின் அறிமுகம் கிடைக்கும்.

பணியாளர்கள்: பணியாளர்கள் நிலுவைப்பணியை கண்டறிந்து விரைவாக நிறைவேற்றுவர். தாமதமான சலுகைப்பயன் ஒரளவு கிடைக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். எதிர்பார்த்த கடனுதவி, பணிமாற்றம் ஆகியவை வந்துசேரும். அனுபவசாலிகளின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவர்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணி இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவர். பணிச்சுமையால் உடல் அசதிக்கு ஆளானாலும் வருமானம் கூடும். சலுகைப்பயன்களை நிர்வாகத்தினரிடம் கேட்டுப் பெறுவர். குடும்ப பெண்கள் கணவரின் பேச்ø கேட்டு நடந்தால் குடும்பத்தில் அமைதி நிலைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அவரவர் தகுதிக்கேற்ப கிடைக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். சுயதொழில் புரியும் பெண்கள் மூலதனத்தை உயர்த்தி தொழிலை விரிவுபடுத்துவர். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெற்று லாபவிகிதம் கூடும்.

மாணவர்கள்: மாணவர்கள் விடாமுயற்சியின் மூலம் தரதேர்ச்சியை உயர்த்துவர். பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வர். படிப்புக்கான பணவசதி சீரான அளவில் கிடைக்கும். வருட பிற்பகுதியில் படிப்பில் அதிக ஆர்வம் ஏற்படும். படித்து முடித்தவர்களுக்கு கவுரவமான வேலை கிடைக்கும். சக மாணவர்களுடன் கருத்து வேற்றுமை கூடாது.

அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் செய்த சமூகப்பணிகளுக்கான நற்பலன் இப்போது தேடி வரும். ஆதரவாளர் உங்கள் மீது அதிக நம்பிக்கை கொள்வர். அரசு தொடர்பான விஷயங்கள் எளிதாக நிறைவேறும். எதிரியால் வரும் கெடுசெயலை சமயோசிதமாக சரிசெய்ய முயற்சிப்பர். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் முன்னேற்றம் காண்பர். தாராள பணவரவு கிடைக்கும்.

விவசாயிகள்: விவசாயப்பணிகள் எளிதில் நிறைவேறி எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். பயிர்களுக்கு நல்ல விலை பெறுவர். கால்நடை வளர்ப்பில் கணிசமான லாபம் உண்டு. நிலம் தொடர்பான விவகாரம் இருந்தால் தீர்வு பெற தாமதமாகும்.

பரிகாரம்: மீனாட்சியை வழிபடுவதால் உடல் நலம் பெறுவதோடு லாபம் கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !