உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) - கோலாகலம் குதூகலம் 80/100

மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) - கோலாகலம் குதூகலம் 80/100

பிறருக்கு உதவும் மனம் கொண்ட மகரராசி அன்பர்களே!

புத்தாண்டில் பிரதான கிரகங்களில் குருபகவான் வருடம் முழுவதும் நல்ல பலன்களை வழங்கும் வகையில் உள்ளார். ராகுவும் தன் பங்கிற்கு கார்த்திகை மாதம்(டிசம்பர்) வரையிலும் சிறந்த பலன்களைத் தருவார். சனி, கேது சில மாறுபட்ட பலன்களைத் தரும் இடங்களில் உள்ளனர். உங்களின் செயல் திறமைகளை வெளி உலகுக்கு கொண்டு வருவதற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். பேசும் நேரத்தை குறைத்து பணிபுரியும் நேரத்தை அதிகரிப்பீர்கள். புத்திரர்களின் பிடிவாத குணம் கண்டு அதிருப்திக்கு ஆளாகலாம். உடல் ஆரோக்கியமாக இருக்க தகுந்த பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. நிர்பந்தம் கொடுத்து வந்த கடன் தொல்லையில் இருந்து விடுபட்டு நிம்மதி உண்டாகும். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்வர். குடும்பத்தில் குதூகலமும் மங்கல நிகழ்வும் உண்டாகும். நண்பர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தின் முக்கிய தேவைகளை சரிவர நிறைவேற்றி சந்தோஷம் காண்பீர்கள். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சிபெற கடின உழைப்பு தேவைப்படும். புதிய நுட்பங்களை பயன்படுத்தி தொழில் வளர்ச்சிக்கு வழிவகுப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக கிடைக்கும். மூத்த சகோதரரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயல்வீர்கள். வெளியூர் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். திருமண முயற்சி ஈடுபடுபவர்களுக்கு குருவருளால் திருமணம் விரைவில் கைகூடும்.

தொழிலதிபர்கள்: தங்கள் தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை அடைய புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம். எதிர்கால வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். தொழிலாளர்களின் நலனில் அக்கறை உண்டாகும். சமூகத்தில் நற்பெயரும் புகழும் கிடைக்கும்.

வியாபாரிகள்: மூலதனத்தை அதிகப்படுத்தி வியாபார வளர்ச்சிக்கு வழிகாண்பர். விற்பனையில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். அதிக லாபம் கிடைப்பதோடு பழைய பாக்கியும் வசூலாகும். புதிய கிளை துவங்குகிற முயற்சி திட்டமிட்டபடி நிறைவேறும்.

பணியாளர்கள்:  பணியாளர்கள் தமக்கு உரிய பணியின் பொறுப்பை நன்கு உணர்ந்து செயல்படுவர். கடந்தகாலத்தில் சந்தித்த பணி சார்ந்த குறைபாடு பெருமளவில் குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகைப்பயன் திருப்திகரமாக கிடைக்கும். சக பணியாளர்களிடம் நட்பு பாராட்டுவீர்கள். பணியிலக்கை விரைவில் எட்ட புதிய தொழில்நுட்பங்களை அக் கறையுடன் தெரிந்து கொள்வீர்கள். பணிச்சுமை அதிகமானாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது.

பெண்கள்:  பணிபுரியும் பெண்கள் ஒருமுகத் தன்மையுடன் செயல்பட்டு பணி இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவர். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உங்களின் வருமானம் உதவும். குடும்ப பெண்கள் கணவரின் மனப்பாங்கு அறிந்து செயல்படுவர். தாய்வழி சீர்முறை கிடைக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியின் அளவு, தரம் உயர்த்துவர். விற்பனை சிறந்து லாபவிகிதம் கூடும்.

மாணவர்கள்: மாணவர்கள் படிப்பில் ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் தரத்தேர்ச்சி பெறுவர். வேலைவாய்ப்பு பெறுவதிலும் அனுகூலம் உண்டு. சக மாணவர்களால் பெற்ற உதவிக்கு நன்றியுடன் நடந்து கொள்வீர்கள். பெற்றோர் பெருமைப்படும் வகையில் உங்களின் ஒவ்வொரு செயலும் அமைந்திடும்.

அரசியல்வாதிகள்:  அரசியல்பணி சிறப்பாக அமைந்து மக்கள் மத்தியில் நற்புகழ் பெறுவீர்கள். ஆதரவாளர்களின் மனதில் செல்வாக்கு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவால் உங்களின் கோரிக்கை எளிதாக நிறைவேறும். எதிரிகளின் மறைமுகத் தொல்லைக்கு தகுந்த பதிலடி கொடுப்பீர்கள்.

விவசாயிகள்: விவசாயப்பணிகள் நல்ல முறையில் நடந்து நல்ல மகசூல் கிடைக்கும். விளைபொருட்களுக்கு சந்தையில் அதிக விலை கிடைக்கும். புதிதாக விவசாய நிலம் வாங்க அனுகூலம் உண்டு. கால்நடையாலும் ஓரளவு ஆதாயம் கிடைக்கும்.

பரிகாரம்: ராமரை வழிபடுவதால் தொழிலில் வளர்ச்சியும், வீட்டில் மகிழ்ச்சியும் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !