கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) - குடும்பத்தில் நிம்மதி 65/100
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கும்பராசி அன்பர்களே!
புத்தாண்டில் பிரதான கிரகங்களில் கேது கார்த்திகை மாதம் முதல் பங்குனி வரை(டிசம்பர்- மார்ச்) அளப்பரிய நற்பலன்களை அள்ளித்தருவார். சனிபகவான் புரட்டாசி(செப்டம்பர்) முதல் அஷ்டமச்சனியில் இருந்து விலகி இதுவரை அனுபவித்த சிரமங்களை ஓரளவு குறைத்து விடுவார். லட்சியங்களை நோக்கி விரைந்து செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆதரவினால் நன்மை பெறுவீர்கள். பேச்சில் கடைபிடித்து வந்த கடினப்போக்கில் மாற்றம் உண்டாகும். வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு நடைமுறையை மேற்கொள்வது அவசியம். தாய்வழி உறவினர்களிடம் அன்பு பாராட்டி மகிழ்வீர்கள். புத்திரர் செயல்பாடு கண்டு மனவருத்தம் உண்டாகும். அவர்களின் படிப்பில் மந்தகதியும், வேலைவாய்ப்பில் தாமதம் ஏற்படும். பூர்வ சொத்தில் பெறுகிற வருமானத்தைவிட செலவு கூடுதலாகும். வீட்டுச்செலவுக்கு பணத்தேவை அதிகரிக்கும். கடன், வழக்கு போன்ற விஷயங்களில் இப்போதைக்கு நிதானமும், பொறுமையும் தேவை. உடல்நலம் சீர்பெறத்தேவையான முயற்சிகளில் இறங்குவது நல்லது. தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்ப நிம்மதியை பாதுகாத்திடுவர். வீட்டில் சுப நிகழ்ச்சிகளை எளிய முறையில் நடத்துவீர்கள். நன்னடத்தை குறைவானவர்களிடம் பழகுவதாலும் உதவுவதாலும் சிரமம் வரலாம். கவனம். தொழில் சார்ந்த வகையில் குருபகவானின் பார்வை பலத்தால் நன்மை பெறும் வாய்ப்புண்டு.
தொழிலதிபர்கள்: தொழிலில் உற்பத்தியும், தரமும் சிறக்க அனுபவசாலியின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படுத்துவர். புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி தேவைப்படும். லாபம் மிதமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கான நிதியுதவி கிடைப்பதில் சிரமத்தை எதிர்கொள்வர். தொழிற்சாலை பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வது நல்லது.
வியாபாரிகள்: வியாபாரத்தில் அக்கறையுடன் ஈடுபட்டு விற்பனையில் நிர்ணயித்த இலக்கை அடைவீர்கள். பணவரவு ஓரளவு திருப்திகரமாக கிடைக்கும். புதிய உத்திகளைக் கடைபிடித்து புதிய வாடிக்கையாளர்களின் மத்தியில் வரவேற்பு காண்பர். சரக்கு வாகன பராமரிப்புச்செலவு அதிகமாகும்.
பணியாளர்கள்: பணியாளர்கள் பணியிடச் சூழலுக்கு தகுந்தாற்போல் மாறிக் கொள்வர். பதவி உயர்வு பெறுவதில் இருந்த தாமதம் படிப்படியாகவே விலகும். முக்கிய தேவைகளைச் சரிவர நிறைவேற்றும் விதத்தில் வருமானம் சீராக இருக்கும். கடந்த காலத்தில் இருந்து வந்த நிர்வாகத்தின் கெடுபிடிகள் பெருமளவு குறையும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் சக பணியாளர்களின் உதவி கிடைக்கப் பெறுவர். நிர்வாககத்தின் பாராட்டு, சலுகைப்பயன் ஓரளவு கிடைக்கும். பெண்கள் கணவர் வழி உறவினர்களிடம் நற்பெயர் பெறுவர். வாழ்வியல் நடைமுறைக்கு தேவையான பணம் சீராக கிடைக்கும். கணவரின் அன்பு கிடைப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைத்திருக்கும். செலவில் சிக்கனத்தைக் கடைபிடித்து பணநெருக்கடியைக் குறைக்க முற்படுவீர்கள்.
மாணவர்கள்: மாணவர்கள் அக்கறையுடன் படித்து தரத்தேர்ச்சிக்கு முயல்வர். சக மாணவர்களுடன் நட்பு வளரும். படித்து முடித்தவர்கள் குடும்ப பொருளாதாரம் கருதி கிடைத்த பணியில் சேர்ந்து கொள்வர். புதியவர்களை நண்பர்களின் அறிமுகம்கிடைக்கும். வாகன பயணங்களில் மிதவேகம்பின்பற்றுவதுநல்லது.
அரசியல்வாதிகள்: அரசியலில் புறக்கணித்தவர்கள் கூட உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் சூழல் உருவாகலாம். பதவி பொறுப்பு கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. ஆதரவாளர்கள் நம்பிக்கையைப் பெற பெரும் பணம் செலவாகும். எதிரி செய்யும் பரிகாசத்திற்கு தகுந்த பதில் கொடுப்பீர்கள். சமூகப்பணிகளைச் செய்து மக்களின் மனதில் இடம்பெற முயற்சிப்பீர்கள்.
விவசாயிகள்: விவசாயப் பணிகளில் இருந்த தயக்கநிலை மாறி ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த மகசூல் கிடைக்க வாய்ப்புண்டு. கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற லாபவிகிதம் குடும்பத்தின் முக்கிய செலவுகளுக்கு உதவும். நிலம் தொடர்பான விவகாரங்களில் மிதமான போக்கை கையாள்வது நல்லது.
பரிகாரம் : ஆஞ்சநேயரை வழிபடுவதால் மனதைரியமும் தொழில்வளமும் உண்டாகும்.