மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) - கடின உழைப்பு 75/100
வெளிப்படையாக பேசத் தயங்கும் மீனராசி அன்பர்களே!
புத்தாண்டில் பிரதான கிரகங்களில் குரு, சனி, ராகுவின் அமர்வு நல்ல பலன்களை தருகிற இடங்களில் இல்லை. கேது பகவான் மட்டும் சித்திரை முதல் கார்த்திகை மாதம் வரை(ஏப்ரல்- டிசம்பர்) அனுகூல பலன் தரும் வகையில் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உள்ளார். கடினமாக உழைப்பதன் மூலம் தேவை யாவும் நிறைவேறும். சப்தம, அஷ்டமச்சனியின் தாக்கத்தினால் வாழ்வில் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். புத்திரர்கள் படிப்பு, வேலைவாய்ப்பில் ஓரளவு வெற்றி காண்பர். அவர்களின் கவனக்குறைவான செயல்களைக் கண்டிப்பதில் மென்மையான அணுகுமுறை தேவை. கடன் தொந்தரவால் சிரமப்பட வாய்ப்புண்டு. ஆடம்பர செலவைத் தவிர்ப்பதன் மூலம் கடன்சுமையில் இருந்து விடுபடலாம். உறவினர்களின் ஆதரவு மனதிற்கு ஆறுதல் தரும். பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்பது கூடாது. தம்பதியர் குடும்ப நலன் கருதி ஒற்றுமையுடன் நடப்பது அவசியம். ராகுவின் அமர்வினால் சிலருக்கு வீடு, பணியிடமாற்றம் செய்ய வேண்டிய நிர்ப்பந்த சூழல் ஏற்படும். கடின உழைப்பினால் சோர்வுக்கு ஆளாவீர்கள். ஆதாயநோக்கில் அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சி பெற புதிய அணுகுமுறையும், உத்வேக செயல்பாடும் அவசியம்.
தொழிலதிபர்கள்: தொழிலில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி குறைகளை களைய முற்படுவர். சுமாரான உற்பத்தியும் மிதமான லாபமும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பைப்பெற கூடுதல் முயற்சி தேவை. மாற்றுத்தொழில், விரிவாக்க முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. அரசு தொடர்பாக அனுகூலம் பெறுவர்.
வியாபாரிகள்: வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெற புதிய உத்திகளைக் கடைபிடிப்பர். மிதமான வளர்ச்சியும், அதற்கேற்ப மிதமான லாபமும் கிடைக்கும். கூடுமானவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பது சிரமத்தைத் தவிர்க்க உதவும். பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்ப்து கூடாது. வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.
பணியாளர்கள்: பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புண்டு. இருந்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. சிலருக்கு விரும்பாத பணிமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பின்பற்றி ஆதாயம் காண்பீர்கள். சக பணியாளர்களிடம் நட்பு பாராட்டுவீர்கள். அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்பட முற்படுவீர்கள்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கடந்த காலத்தில் இருந்த குளறுபடியை சரிப்படுத்த முயல்வர். பணியிடத்தில் சுதந்திர உணர்வுடன் பணியாற்றுவர். சலுகைப்பயன்கள் ஓரளவு கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் குறை, நிறைகளை பெரிதுபடுத்தாமல் குடும்பநலனை மட்டுமே கருத்தில் கொள்வது நல்லது. ஆபரணச் சேர்க்கை அவரவர் வசதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியில் தரம் உயர்த்துவர். ஓரளவு வளர்ச்சியும், மிதமான லாபமும் கிடைக்கும். நடைமுறைச் செலவைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி காண்பர்.
மாணவர்கள்: மாணவர்கள் வெளிவட்டார பழக்கம் குறைத்து படிப்பில் கவனம் கொள்வது நல்லது. தரதேர்ச்சிபெற கடின முயற்சி தேவைப்படும். படிப்புக்கான பணவசதி கிடைப்பதில் சிரமம் இருக்காது. ஆடம்பரச் செலவைக் குறைப்பது மிக அவசியம். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்வது கூடாது.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களில் சிலர் அதிருப்தி மனப்பாங்குடன் நடந்து கொள்வர். அவர்களைச் சரிக்கட்ட பெரும் பணம் செலவழியும். எதிரியால் வரும் இடையூறுகளைக் களைய பணமும், நேரமும் செலவாகும். இருப்பினும் அமைதியை ஒருபோதும் இழக்க மாட்டீர்கள். அரசு அதிகாரிகளிடம் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிக முயற்சி செய்ய வேண்டியதிருக்கும்..
விவசாயிகள்: விவசாயப்பணிக்கான பணம் புரட்டுவதில் சிரமம் உண்டாகும். வருட முற்பகுதியில் நல்ல மகசூலும் கூடுதல் விலையும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு வருமானம் பெறுவீர்கள். நில விவகாரங்களுக்கு தீர்வு பெறுவதில் தாமதம் ஏற்படும். சமரச முயற்சியின் மூலம் நிலப்பிரச்னையிலிருந்து விடுபடுவீர்கள்.
பரிகாரம்: வெங்கடாஜலபதியை வழிபடுவதால் வாழ்வில் எல்லா வளமும் உண்டாகும்.