அன்னுார் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்
அன்னுார்:வட்டமலை ஆண்டவர் கோவிலில், நேற்று 29ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. தேவர் களை துன்புறுத்திய சூரபத்மனை, முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தது கந்த சஷ்டி விழா வாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல், சஷ்டி வரை, ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழா நடக்கிறது.
ஆறாவது நாள் சூரசம்ஹாரம் நடக்கிறது.குமாரபாளையத்தில், 200 ஆண்டுகள் பழமையான வட்டமலை ஆண்டவர் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று 29ம் தேதி துவங்கியது. காலை 10:00 மணிக்கு, பால், தயிர், தேன், பன்னீர் உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து, பெண்கள் கந்த சஷ்டி கவசம் வாசித்தனர். மதியம் 1:00 மணிக்கு, அலங்கார பூஜை நடந்தது. முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
வரும் சனிக்கிழமை வரை, தினமும் காலையில், அலங்கார பூஜை, அபிஷேக பூஜை, கந்த சஷ்டி கவசம் வாசித்தல் நடக்கிறது. நிறைவு நாளன்று, முருகப்பெருமான், வள்ளி தெய் வானை சமேதரராக, உட்பிரகாரத்தில் உலா வந்து அருள்பாலிக்கிறார்.
அன்னூர், மன்னீஸ்வரர் கோவிலில், முருகன் சன்னதியில், நேற்று 29ம் தேதி காலையில் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
எல்லப்பாளையம், பழனி ஆண்டவர் கோவில், குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகியவற்றில், நேற்று 29ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் பலர், ஆறு நாள் விரதத்தை, நேற்று துவக்கினர்.