சென்னிமலையில் சூரசம்ஹார விழா கோலாகலம்
சென்னிமலை: சென்னிமலையில் நடந்த, கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை, ஆயிரக்கணக்கான பக்தர்கள், கண்டு களித்தனர்.
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்தர் சஷ்டி விழா, கடந்த, 28ல் தொடங்கியது. இதையொட்டி ஐந்து நாட்களும், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. முன்னதாக, சூரனை வதம் செய்வதற்காக, சக்தி வேல் வாங்கும் வைபோகம், மதியம், 2:00 மணிக்கு மலை கோவிலில் நடந்தது. தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார், சிறப்பு பூஜைகள் செய்து, முருகப்பெருமானிடம் சக்தி வேலை ஒப்படைத்தார். அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு தொடங்கியது. படிக்கட்டுகள் வழியாக, முருகப்பெருமான் சமேதராக மலை அடிவாரத்தில் எழுந்தருளினார். இரவு, 8:30 மணிக்கு வாணவேடிக்கை மற்றும் சிறப்பு மேளதாளத்துடன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. நான்கு ராஜவீதிகளில் நடந்த நிகழ்ச்சியை ஆயிரக்காணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேற்கு ரத வீதியில் ஜெகமகாசூரன் வதம், வடக்கு ரத வீதியில் சிங்கமுகாசூரன் வதம், கிழக்கு ரத வீதியில் வானுகோபன் வதம், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெருமான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. அதன்பின் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக, கைலாசநாதர் கோவிலில் எழுந்தருளினார். இன்று காலை, 10:30 மணிக்கு முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவத்துடன், கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது.
* ஈரோடு, திண்டல், வேலாயுதசுவாமி கோவிலில், சூரசம்ஹார விழா, நேற்று மாலை, ?:?? மணிக்கு நடந்தது.
பச்சமலை, பவளமலையில்...: கோபி பச்சமலை முருகன் கோவில், சூரசம்ஹார நிகழ்வு,கோபி பச்சமலை ரோடு, மேட்டுவலவு, புதுப்பாளையம் ஆகிய இடங்களில், சூர வதம் நிகழ்ந்தது. இதையடுத்து மதியம் பன்னீர் அபிஷேகம், சண்முகருக்கு அர்ச்சனை நடந்தது. இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், சூரசம்ஹார நிகழ்வு கிரிவலப்பாதையில் நடந்தது.
புளியம்பட்டியில்...: புன்செய்புளியம்பட்டி, காமாட்சியம்மன் கோவிலில், முத்துக்குமரன் சன்னதியில், அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனங்களில், சுவாமி ஊர்வலம் நடந்தது. இதையடுத்து சூரபத்மனின் மூன்று அவதாரங்களையும், முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. காமாட்சியம்மன் கோவில் மைதானத்தில், போர் புரிய வந்த சூரபத்மனை முருகப்பெருமான், வேல் கொண்டு வதம் செய்தார். இறுதியில், மாமரமாக உருவெடுத்து வந்த சூரபத்மனை, சேவலாகவும், மயிலாகவும் உருமாறச் செய்தார்.