உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: சூரசம்ஹாரத்தில் பக்தர்கள் பரவசம்

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: சூரசம்ஹாரத்தில் பக்தர்கள் பரவசம்

மல்லசமுத்திரம்: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷம் முழங்க, சக்திவேலால், கந்தசாமி, சூரனை வதம் செய்யும் நிகழ்வு, கோலாகலமாக நடந்தது.

சேலம் அருகே, காளிப்பட்டி, கந்தசாமி கோவிலில், சூரசம்ஹார விழா, காப்புக்கட்டு உற்சவத்துடன், நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை, 6:00 முதல், கந்தசஷ்டி கவச பாராயணம், பக்தர்களால் செய்யப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு, கோவிலில் இருந்து,  கையில் சக்திவேலை ஏந்தி, கந்தசாமி போர்க்கோலத்தில் வெளியே வரச்செய்தனர். அவருக்கு எதிரே, அசுரர்கள் போர்புரிய காத்திருந்தனர். தொடர்ந்து, அங்கு குவிந்திருந்த பக்தர்களின், அரோகரா, வெற்றிவேல், வீரவேல் கோஷம் முழங்க, யானை முக சூரன், சிங்க முக  சூரன், ஆடு முக சூரன் இறுதியாக சூர பத்மனை, கந்தசாமி, சக்திவேலால் அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின், பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த நெல், கடலை, வாழைப்பழங்களை, கந்தசாமி மீது வீசி, நன்றி தெரிவித்தனர்.

* பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள முருகன் நேற்று மாலை அலங்கரிக்கப்பட்டு மேளதாளங்களுடன் எழுந்தருளி பிரதான வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கஜமுகம், சிங்கமுகம் மற்றும் சூரபத்மனை வதம் செய்தார். அப்போது  சுற்றியிருந்த பக்தர்கள், அரோகரா என முழக்கமிட்டு பக்திப்பரவசத்துடன் கண்டுகளித்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சோமசேகர், ராம்குமார் சிவாச்சாரியார், சீனிவாச குருக்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். இதேபோல், கபிலர்மலை  பாலசுப்பிரமணியசுவாமி, பொத்தனூர் பஜனை மடம் முருகன், ப.வேலூர் பேட்டை பகவதியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன் ஆகிய கோவில்களில் சூரசம்ஹாரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !