உள்ளூர் செய்திகள்

இதுதான் குரங்கு மனசு

ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின உழைப்பாளிகள். இதில் ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சில நாளிலேயே குழந்தையின் தாய் இறந்து விடவே, குழந்தையை வளர்ப்பதில் தந்தை மிகவும் சிரமப்பட்டார். இந்நிலையில் அவரது தோட்டத்தில் பயிர்களை கொரில்லா குரங்குகள் அடிக்கடி சேதப்படுத்தின. குழந்தை வளர்ப்பு, குரங்கு தொல்லை என அன்றாட வாழ்வே போராட்டமாகி விட்டது. ஒருநாள் காலையில் நிலத்தை உழுது கொண்டிருந்தார். துாங்கிக் கொண்டிருந்த குழந்தையின் அழுகுரல் கேட்கவே, குடிலுக்கு ஓடி வந்தார். அப்போது தாய்க்குரங்கு ஒன்று தன் குட்டிகளுடன் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டார். குழந்தையின் கதி என்னாகுமோ என பீதியுடன் நெருங்கினார். என்ன ஆச்சர்யம்! குழந்தையை மார்போடு அணைத்து பாலுாட்டியது தாய்க்குரங்கு. தொட்டிலைச் சுற்றி குட்டிகள் விளையாடின. சற்று நேரத்தில் குழந்தையை விட்டு விட்டு குட்டிகளுடன் குரங்கு புறப்பட்டது. பெற்ற தாய் போல வந்து குழந்தைக்கு பாலுாட்டிய குரங்கும் ஆண்டவரின் படைப்பு தானே. இனி யாரும் குரங்கு மனசு என குறைவாக நினைக்காதீர்கள். அதற்கும் இருப்பது தாய்மனசு தான்.