உள்ளூர் செய்திகள்

தெய்வத் திருமணம் - 5

முருகன் - தெய்வானை திருமணம்காசியப முனிவர், மாயை தம்பதியின் மகனாகப் பிறந்தவன் சூரபத்மன். இவன் சிவபெருமானை வேண்டி தவமிருந்து சாகாவரம் கேட்டான். தாயின் வயிற்றில் பிறந்த அனைவரும் மரணமடைவது உறுதி. அதனால் எப்படி அழிவு வர வேண்டும் என்று மட்டும் கேட்கலாம் என்றார் சிவபெருமான். அவன் தனக்கு எந்த வகையிலும் அழிவு வரக் கூடாது என கருதி 'பெண்ணின் வயிற்றில் பிறக்காத ஒருவனால் மட்டுமே அழிவு வர வேண்டும்' என வரம் கேட்டான். சிவபெருமானும் அவன் கேட்டபடியே வரம் கொடுத்தார். அதன் பின் சூரபத்மன் அசுரர்களின் தலைவனாகித் தேவர்களை துன்புறுத்த தொடங்கினான். சிவபெருமானிடம் சென்ற தேவர்கள் தங்களின் பிரச்னையைச் சொல்லி முறையிட்டனர். விரைவில் அசுரர்களிடம் இருந்து காப்பதாக அவரும் தெரிவித்தார். இதன் பிறகு சிவபெருமான் தியானத்தில் ஆழ்ந்திருக்க, அவரது நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அவை கங்கையில் தவழ்ந்து சரவணப் பொய்கையை அடைந்தன அங்கிருந்த தாமரை மலர்களில் சேர்ந்து ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. அக்குழந்தைகள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டன. அவர்கள் ஆறுபேரையும் பார்வதி ஒன்று சேர்த்து 'கந்தன்' (ஒன்று சேர்க்கப்பட்டவன்) எனப் பெயரிட்டாள். அவன் அழகனாக இருந்ததால் முருகன் (அழகானவன்) எனப் பெயர் பெற்றான். விளைவு ஆற்றல் (இச்சா சக்தி), செயல் ஆற்றல் (கிரியா சக்தி), அறிவு ஆற்றல் (ஞான சக்தி) என்னும் மூன்று சக்திகள் கொண்டவராக முருகன் இருக்கிறார். வள்ளி, தெய்வானை என்னும் இருவரையும் திருமணம் செய்த முருகனின் வரலாறு சுவையானது. சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் கண்டு மகிழ்ந்த திருமாலுக்கு கண்ணீர் பெருகியது. அப்போது மகாலட்சுமி அருளுடன் பார்க்க, அந்தக் கண்ணீர்த் துளிகள் அழகியப் பெண்களாக வடிவெடுத்தன. அந்தப் பெண்களைத் தங்களின் மகள்களாக ஏற்று, அமிர்தவல்லி, சுந்தரவல்லி எனப் பெயரிட்டு வளர்த்தனர்.அவர்கள் இருவரும் முருகப்பெருமானைத் திருமணம் செய்ய விரும்பித் தவத்தில் ஈடுபட்டனர். அதைக் கண்டு மகிழ்ந்த முருகன் திருமணத்திற்கு சம்மதித்து, அமிர்தவல்லியைத் தேவலோகத்திலும், சுந்தரவல்லியை பூலோகத்திலும் பிறக்கச் செய்தார். அதனைத் தொடர்ந்து, அமிர்தவல்லி தேவலோகக் குளத்தில் பூத்த நீலோற்பல மலர் ஒன்றில் குழந்தையாகத் தோன்றினாள். நீலோற்பல மலர்கள் நிறைந்த அந்தக் குளத்தில் நீராட வந்த தேவர்களின் தலைவன் இந்திரனும், இந்திராணியும் அந்தக் குழந்தையை எடுத்துச் சென்று வளர்க்கத் தொடங்கினர். தேவலோக யானையே ஐராவதம் அந்தக் குழந்தையை வளர்த்து வந்தது. அதனால் அக்குழந்தைக்குத் தெய்வ யானை (தெய்வானை) என பெயர் ஏற்பட்டது. அவளும் வளர்ந்து பெரியவளானாள். இந்நிலையில், சூரபத்மன் தலைமையிலான அசுரர்களின் கொடுமை அதிகரிக்க ஆரம்பித்தது. இதில் பாதிக்கப்பட்ட தேவர்கள், தலைவனான இந்திரனிடம் முறையிட்டனர். அவர்களுக்காக பலமுறை போரிட்டும் இந்திரனால் அவர்களை வெல்ல முடியவில்லை. அதனால் பூலோகத்திற்குச் சென்று மறைந்து வாழத் தொடங்கினான்.தேவகுருவான பிரகஸ்பதி மூலம் சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார் முருகப்பெருமான். அவர்களால் தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் எல்லாம் துன்பப்படுவதையும் உணர்ந்தார். அசுரர்களின் கொடுமையில் இருந்து அனைவரையும் காப்பதற்காக போரிட முடிவு செய்தார். தந்தையான சிவபெருமான் அருளாசி வழங்கினார். தாய் பார்வதி தன் சக்தியை எல்லாம் திரட்டி வேலாக்கினாள். அதையே முருகனுக்கு ஆயுதமாக வழங்கினாள். மேலும் தன் கால் கொலுசில் இருந்து வீரபாகுவைத் தோற்றுவித்து படைக்குத் தளபதியாக முருகனுடன் அனுப்பி வைத்தாள். முருகப்பெருமான் ஆயிரக்கணக்கான படை வீரர்களுடன் போருக்கு புறப்பட்டார். சூரபத்மனின் சகோதரரான சிங்கமுகன், தாரகாசுரன் உள்ளிட்ட அசுரர்களையும், அசுரப்படைகளையும் ஐந்து நாளில் படைவீரர்கள் கொன்று குவித்தனர். அசுரர்களில் கடைசியாகச் சூரபத்மன் ஒருவன் மட்டும் மிஞ்சியிருந்தான். ஆறாம் நாளில் அவனது இருப்பிடத்திற்குச் சென்ற முருகன் போருக்கு வருமாறு அழைத்தார். 'சிறுவனான உன்னுடன் நான் போரிட விரும்பவில்லை' எனச் சொல்லி பல வழிகளில் பயமுறுத்தினான். எதற்கும் பயப்படாமல் முருகன் அங்கேயே நின்றார்.சிறுவனான முருகனைக் கொல்வது, தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் நினைத்தும் சூரபத்மன் ஒதுங்கினான். கொடியவனாக இருந்தாலும் அவனது மனதிலும் நல்ல எண்ணம் இருப்பதை அறிந்த முருகன், அவனைக் கொல்ல விரும்பவில்லை. மாறாக ஆட்கொண்டு தன்னுடனே வைத்துக் கொள்ள முடிவு செய்தார். இந்நிலையில் சூரபத்மன் மாமரமாக மாறி தப்பிக்க முயற்சித்தான். அதைக் கண்ட முருகப்பெருமான் வேலால் மாமரத்தை இரண்டாகப் பிளந்தார். அதில் ஒரு பாதியை மயிலாக்கி வாகனமாகவும், மற்றொரு பாதியைச் சேவலாக்கிக் கொடியாகவும் ஆக்கி தன்னுடனே வைத்துக் கொண்டார். சூரபத்மனால் இனி துன்பம் ஏற்படாது என தேவர்களும், முனிவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். சூரபத்மனுக்குப் பயந்து மறைந்து வாழ்ந்த இந்திரனும் நிம்மதி அடைந்தான். முருகப்பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தன் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொடுக்க இந்திரன் விரும்பினான். தன் எண்ணத்தை முருகனிடம் சொல்ல, அவரும் சம்மதித்தார். இந்திரலோகம் சென்ற இந்திரன், சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை முருகன் அழித்ததையும், அதற்கு நன்றியாக முருகனுக்கு திருமணம் செய்ய இருப்பதையும் மகளிடம் தெரிவித்தான். அதைக் கேட்ட தெய்வானை மகிழ்ச்சி அடைந்தாள். மறுநாளே முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும், இந்திரன் மகள் தெய்வானைக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. முருகனின் பெற்றோரான சிவன், பார்வதியின் தலைமையில் தேவர்களும், முனிவர்களும் ஒன்று கூட திருமண வைபவம் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்திற்குப் பிறகு முருகப்பெருமான் சுப்பிரமணிய சுவாமி எனப் பெயருடன் இங்கேயே குடிகொண்டார். -திருமணம் தொடரும்தேனி மு.சுப்பிரமணி99407 85925