சித்தர்களின் விளையாட்டு - 9
கொங்கண சித்தர்''நாரதரே! தியாக மனம் கொண்டவர்கள் பெண்கள். குடும்பக் கடமையை பாரமாக கருதாமல் விரும்பி சுமப்பவர்கள். அவர்களின் உலகமே கட்டிய கணவரும் பெற்ற குழந்தைகளும் தான். அதனால்தான் பெண்களை சக்தியின் வடிவமாகவும், பூமித்தாயாகவும் வணங்குகிறோம். அப்படிப்பட்ட பெண்ணை சபிக்க நினைத்த சித்தரான கொங்கணர் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட வரலாறை கேளுங்கள்” என ஆரம்பித்தாள் பார்வதி.கொங்கணர் பெரும் செல்வந்தராக இருந்தார். அவரது குடும்பத்தினர் உலோகங்களை உருக்கி சிலை செய்யும் கலையில் வல்லவர்கள். உலோக கலவைகள் மூலம் படைக்கருவிகள், சிலைகளும் செய்து வந்தனர். பொருட்கள் தரமாக இருந்ததால் பெரிய அளவில் வியாபாரம் நடந்தது. அவர்களும் கவுரவத்துடன் வாழ்ந்து கடவுளுக்கு சேவை செய்தும், தானம் செய்தும், நெறி தவறாமல் வாழ்ந்து வந்தனர். ஆனாலும், செல்வந்தரான கொங்கணருக்கு மனதில் நிம்மதியில்லை. எதையோ இழந்தது போன்ற உணர்வு இருந்து வந்தது.அவரது ஊரின் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் பழமையான கோயிலில் பவுர்ணமி அன்று தவம் இருந்தால் நிம்மதி கிடைக்கும் என பலர் சொல்லவே அங்கு தியானம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அசரீரி கேட்டது. “யோக நிலையில் கடவுளை வணங்கு. நீ தேடிய நிம்மதி கிடைக்கும்” எனக் கூற கொங்கணர் விருப்பு, வெறுப்பு கட்டுக்களை உதறித் தள்ளி, யோகநிலையில் அமர்ந்து, தவம் செய்ய ஆரம்பித்தார். பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்தன. தன்னைச் சுற்றி பெரும் வெளிச்சம் தெரியவே கண் விழித்தார். அடர்ந்த காட்டில் ஒளி மின்னும் உடலுடன், இளமையாக தான் இருப்பதை அறிந்தார். சிவனே உடலில் குடியிருப்பதாகக் கருதி மகிழ்ந்தார். அருகில் ஓடிய ஆற்றில் குளித்தார். பல ஆண்டுகள் உண்ணாமல் உறங்காமல் தவம் செய்ததாலும், நீண்ட நாள் கழித்து வெளியுலகத்தை பார்த்ததாலும் ஐம்புலன்கள் விழிப்புடன் செயல்பட்டன. மெதுவாக நடக்க ஆரம்பித்தார். பசி கிள்ளியது. எங்காவது யாசகம் எடுக்க வேண்டுமே என பார்த்தார். அக்கம் பக்கத்தில் வீடுகளே இல்லை. அப்போது திடீரென அவரது தலையில் ஏதோ விழுந்தது. தொட்டுப் பார்த்தார் பறவையின் எச்சம். வானத்தை அண்ணாந்து பார்த்தார். கொக்கு ஒன்று தலைக்கு மேலே பறப்பதை கவனித்தார். தவப்பலனைப் பெற்று புனித நீராடி, துாய உடம்புடன் வரும் போது கொக்கு எச்சமிட்டு அசுத்தம் செய்து விட்டதே என கோபம் கொண்டார். நிமிர்ந்து அந்த கொக்கை பார்க்க அது எரிந்து சாம்பலானது. “பன்னிரெண்டு ஆண்டு தவம் புரிந்ததால் எல்லையில்லாத ஆற்றல் கிடைத்து விட்டது, நான் இனி கடவுளுக்குச் சமம்” என கர்வம் கொண்டார். காட்டை விட்டு மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்தார். வயிற்றுப் பசியை தணிக்க அங்கிருந்த ஒரு வீட்டின் முன் நின்று, “நான் கொங்கணர் வந்திருக்கிறேன். பசிக்கிறது. உணவு வேண்டும்” என்றார். கதவு திறந்தது. ஒரு பெண் வந்தாள். ''காத்திருங்கள்'' எனக் கூறி விட்டு உள்ளே சென்றாள்.நீண்ட நேரமாக உணவு கொண்டு வரவில்லை. ஆகையால் கொங்கணர், “ உணவு தரமுடியுமா? முடியாதா?” என சத்தமிட, அந்த பெண் “பொறுமையாக இருங்கள். என் கணவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சாப்பிட்டதும் வருகிறேன்” எனச் சொல்லி விட்டு உள்ளே சென்றாள். சற்று நேரத்தில் அந்தப் பெண் உணவுடன் வந்தாள். ஒரு சாதாரண பெண் ஒரு வேளை உணவுக்காக, சித்தரான என்னை நீண்ட நேரம் காக்க வைத்தாளே என அனல் பறக்க உற்றுப் பார்த்தார். அந்தப் பெண்ணோ சிரித்தபடி, “தாமதத்திற்கு மன்னியுங்கள். உட்கார்ந்து சாப்பிடுங்கள்” என்றாள். ஆனாலும் கொங்கணர் மீண்டும் அந்தப் பெண்ணை கோபத்துடன் பார்த்தார். தன் கோபப்பார்வை அவளை சாம்பலாக்கும் என எண்ணினார். ஆனால் அவளோ எதுவும் நடக்காதது போல சாந்தமான முகத்துடன் 'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?. பசியோடு இருக்கிறீர்கள். முதலில் இந்த உணவை சாப்பிடுங்கள்” என்றாள். கொங்கணரின் தலையில் யாரோ அடித்தது போல இருந்தது. “ நீ ஒரு சாதாரணமானவள் அல்ல. தெய்வப் பெண். பன்னிரெண்டு ஆண்டு தவம் செய்த என்னை ஞானம் பெற வைத்து விட்டாய். என் அறிவுக் கண்ணை திறந்து விட்டாய்'' என வணங்கி நின்றார். ''தவத்தால் நான் பெற்ற ஆற்றலை பரீட்சை செய்ய விரும்பினேன். ஆனால் நீயோ சில மணி நேரத்திற்கு முன் அடர்ந்த காட்டுக்குள் என்னால் கொக்கு ஒன்று சாம்பல் ஆனதை ஞான திருஷ்டியால் தெரிந்து வைத்திருக்கிறாய். உன் ஞானதிருஷ்டியின் முன் என் தவ ஆற்றல் தோற்று விட்டது” என்றார். அவள் மீண்டும் வணங்கி விட்டு, “கொங்கணரே! பெரிய வார்த்தைகளை பேசுகிறீர்கள். கணவர், குழந்தைகளை பராமரிப்பது பெண்ணின் கடமை. கணவருக்கு உணவு பரிமாறும் போது அழைத்தீர்கள். அவர்களுக்கு உணவளிக்கும் கடமையை செய்த பிறகே என்னால் உங்களை பார்க்க முடியும். ஆகையால் தாமதமாக வந்தேன். இதை புரிந்து கொள்ளாமல் என்னை சாம்பலாக்க துடித்தீர்கள். தாங்கள் கோபமாக இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். ஒரு பெண்ணாக குடும்ப கடமையைச் செய்த என்னை கொக்கை போல் எரிக்க முடியாது'' எனக் கூற, தன்னுடைய ஆற்றலின் எல்லையை புரிந்து கொண்டார். “தியாக உணர்வுடன் குடும்பக் கடமை ஆற்றும் பெண்கள் தவசீலர்களை விட மேலானவர்கள் அவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள் என்பதை உணர்ந்தேன்'' என அவளிடம் விடை பெற்ற அவர் அகத்தியர், திருமூலர், போகர் ஆகிய சித்தர்களை தேடி புறப்பட்டார். பார்வதியை வணங்கிய நாரதர், “தாயே! எத்தனையோ பெண்கள் தங்களின் குடும்பத்திற்காக தியாகம் செய்கின்றனர். கொங்கணர் மூலமாக அவர்களை நினைவுபடுத்தியதற்கு நன்றி. இன்னும் அவரைப் பற்றி அறிய ஆவல் உண்டாகிறது” எனக் கூற “என்ன அவசரம் நாரதரே! தன்னைத் தேடி வந்து சீடராகி தவம் செய்ய வந்த மன்னர்களை கொங்கணர் என்ன செய்தார் தெரியுமா?” மகேஸ்வரன் தொடர்ந்தார். -விளையாட்டு தொடரும்ஜெ.ஜெயவெங்கடேஷ்90030 00250