திண்டுக்கல்லில் ஒரு சதுரகிரி
விருதுநகர் மாவட்டம் சதுரகிரிக்கு போக முடியவில்லையா.... அதற்கு இணையாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை எஸ்.மேட்டுப்பட்டி சித்தர்மலையில் உள்ள சிவன் கோயில் சென்று வாருங்களேன்.இந்த மலையில் ஆந்தையர், மகரிஷி போன்ற சித்தர்கள் வாழ்ந்ததால் சித்தர்மலை எனப்பட்டது. இப்பகுதியை மல்லிகார்ஜூன நாயக்கர் ஆட்சி செய்தார். அரண்மனைப் பசுக்களில் ஒன்று மலைக்கு செல்லும் போது மடி நிறைந்தும், கீழிறங்கும் போது மடி வற்றியும் காணப்பட்டது. சந்தேகமடைந்த நாயக்கர் ஒருநாள் பசுவை பின்தொடர்ந்தார். மலை உச்சியில் குறிப்பிட்ட இடத்தில் பசு, தானாக பால் சுரப்பதைக் கண்டு திடுக்கிட்டார். பசுவின் மீது மரக்குச்சியை எறிய அது அருகில் இருந்த சிவலிங்கத்தின் மீது பட, நாயக்கரின் பார்வை பறி போனது. வருந்திய அவருக்கு காட்சியளித்த சிவபெருமான் பால் சுரந்த இடத்தில் கோயில் கட்ட உத்தரவிட்டார். 1487ல் சித்தமகாலிங்க சுவாமி கோயில் கட்டப்பட்டது. சுவாமிக்கு 'மல்லிகார்ஜூன லிங்கம்' என்றும் பெயருண்டு. இங்கு மேற்கு நோக்கி இருக்கும் சிவலிங்கத்தின் ஆவுடைபாகம் (வட்டமான நடுப்பகுதி) வலப்புறமாக உள்ளது. மலைப்பகுதியின் மேற்கில் உள்ள குகைகளில் சமண முனிவர்கள் வாழ்ந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ளன. கற்பூர தீர்த்தம் என்னும் சுனை இங்கு உள்ளது.இத்தலத்தில் வழிபட்டால் திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்கும். பிரதோஷம், மாத சிவராத்திரி நாளில் அன்னதானம் நடக்கிறது. இங்கு மலைக்குச் செல்லும் பாதை கரடுமுரடாக இருப்பதால் 1200 படிகளை அமைக்கின்றனர். இந்த பணி பக்தர்களின் நன்கொடையால் நடக்கிறது.எப்படி செல்வது• திண்டுக்கல்லிலிருந்து நிலக்கோட்டை வழியாக 40 கி.மீ.,• மதுரையில் இருந்து உசிலம்பட்டி, உத்தப்ப நாயக்கனுார் வழியாக 64 கி.மீ., விசேஷ நாள்பிரதோஷம், மாத சிவராத்திரி, அமாவாசை, புரட்டாசி சனி, திருக்கார்த்திகை நேரம்காலை 9:00 - 12:00 மணிமாலை 4:00 - 6:00 மணிதொடர்புக்குஎம்.ராஜ்குமார்: 98432 87130அருகிலுள்ள தலம்அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் 1.5 கி.மீ.,