ஒரு ஜாண் உயர லிங்கம்
தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், திருப்புனவாசல் சிவன் கோயில்களில் பிரம்மாண்டமான லிங்கங்களை தரிசித்திருப்பீர்கள். ஒரு ஜாண் உயரமும், மூன்று விரற்கிடை கனமும் கொண்ட மிகச் சிறிய லிங்கத்தை தரிசிக்க, சென்னை தாம்பரம் அருகிலுள்ள மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு வாருங்கள்.தல வரலாறு:சகரன் என்பவனின் மகனை, கபில மகரிஷி சபித்து விட்டார். இந்த சாபம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்தது. வசிஷ்டரின் ஆலோசனைப்படி, சகரனின் வம்சாவளியில் பிறந்த பகீரதன், கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்து, சிவபூஜை செய்து சாபவிமோசனம் தேடிக்கொண்டான். தனது கோபத்தால், சகரனின் தலைமுறை பாதிக்கப் பட்டதை எண்ணி வருந்திய கபில முனிவர், பிராயச் சித்தம் கிடைக்க சிவபூஜை செய்தார். ஒரு சிறிய லிங்கத்தை இடது கையில் வைத்து, வலது கையால் மலர்களைத் தூவினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தன்னை கையில் வைத்து வணங்கியதன் காரணம் கேட்க, ''மணலில் லிங்கத்தை வைக்க மனமில்லை,'' என்றார். சிவன் அவரிடம், ''கையில் லிங்கத்தை வைத்து பூஜித்தது சரியல்ல,'' எனச் சொல்லி அவரை பசுவாகப் பிறக்கச் செய்தார். பசுவாகப் பிறந்த கபிலர், தொடர்ந்து சிவனை வழிபட்டு முக்திபெற்றார்.பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், அந்த இடத்தில் ஒரு கோயில் எழுப்பினார். பசு வடிவில் கபிலர் வழிபட்ட தலமென்பதால் சுவாமி, 'தேனுபுரீஸ்வரர்' எனப்பட்டார். 'தேனு' என்றால் 'பசு'. இந்த சுவாமிக்கு 'உலகுய்ய வந்த சிற்றேரி நாயனார்' என்றும் பெயர் உண்டு.சிவலிங்க சிறப்பு:கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்த கோயில் இது. மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், ஒரு ஜாண் உயரத்தில் சிறிய லிங்கம் காட்சி தருகிறது. லிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது. லிங்கத்தைச் சுற்றி மண்டபம் போன்ற அமைப்பில் காப்பும், நாகாபரணமும் அணிவித்து உள்ளதால் பார்ப்பதற்கு பெரிதாகத் தோன்றும். சிறிய மூர்த்தி என்றாலும், இவரை வணங்கினால் ஏற்படும் நன்மைகள் அளப்பரியது.வாஸ்து குறை நிவர்த்தி:சிவன் சந்நிதி எதிரிலுள்ள நந்திக்கு மேலுள்ள சுவரில் அஷ்டதிக் பாலகர்கள் (எட்டு திசைகளின் காவலர்கள்) வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி தருவது விசேஷம். 'திசை மாறி வீடு கட்டிவிட்டோமே! வீட்டில் வாஸ்து சரியில்லையே' என நம்புபவர்கள் அஷ்டதிக் பாலகர்களை வணங்கி வந்தால் குறைபாடு தீர்ந்து வளர்ச்சி பிறக்கும் என்பது நம்பிக்கை. அம்பிகை தேனுகாம்பாள் தனி சந்நிதியில் இருக்கிறாள். முன் மண்டபத்திலுள்ள தூணில் கபிலர், கையில் லிங்க பூஜை செய்த சிற்பம் இருக்கிறது.திராட்சை மாலை:மலர் மாலை, எலுமிச்சை மாலை, வடைமாலை ஆகியவற்றை சுவாமிக்கு அணிவித்து பார்த்திருப்பீர்கள். இங்குள்ள வடுக பைரவருக்கு திராட்சை மாலை அணிவிக்கிறார்கள். இவருக்கு வெள்ளைப்பூசணியில் நெய் விளக்கேற்றுவதும் வித்தியாசமான வழிபாடு. சுவாமி சந்நிதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, தன் துணைவியை இடதுதொடையில் அமர்த்தி உள்ள சிற்பம் அபூர்வமானது. துர்க்கையின் கையில் கிளி இருக்கிறது. பிரகாரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜர், கபிலநாதர், இரட்டை விநாயகர், அருணகிரியாரால் பாடப்பெற்ற முருகன் சந்நிதிகள் உள்ளன.புதன்கிரக விசேஷம்:இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் புதன் விசேஷ கிரகமாக வழிபடப்படுகிறார். கல்வியில் பின்தங்கியவர்கள், பேச்சு சரியாக வராதவர்கள் இவருக்கு பாசிப்பயறு படைத்து, துளசி அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.சிற்ப சிறப்பு:ஞாயிறு ராகுகாலத்தில் (மாலை 4.30-6) ஒரு தூணிலுள்ள சரபேஸ்வரர் சிற்பத்துக்கு விசேஷ பூஜை நடக்கிறது. கையில் வீணையுடன் விநாயகர், கையில் சேவலுடன் யானை மீது அமர்ந்த முருகன், மடியில் சீதையை அமர்த்தியிருக்கும் ராமனின் பாதத்தை தொட்டு வணங்கும் ஆஞ்சநேயர், ஐந்து முகங்களுடன் பிரம்மா ஆகிய சிற்பங்கள் விசேஷமானவை.திருவிழா:சித்திரையில் பிரம்மோற்ஸவம், பங்குனி உத்திரத்தில் தெப்பத்திருவிழா.இருப்பிடம்:தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் பஸ்களில், 5 கி.மீ., தூரத்தில் ராஜகீழ்பாக்கம். இங்கிருந்து பிரியும் சாலையில் 3 கி.மீ., சென்றால் மாடம்பாக்கம் கோயில். ஆட்டோ உண்டு.திறக்கும் நேரம்:காலை 6.30- 12, மாலை 5- 8.30.போன்:044 2228 0424.