உள்ளூர் செய்திகள்

தீபாராதனை தட்டை தொட்டு வணங்கக்கூடாத கோயில்

தீபாராதனையைப் பார்க்கலாம். ஆனால் தொட்டு வணங்கக் கூடாது. இப்படி ஒரு அதிசய வழக்கம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள நகரசூரக்குடி தேசிகநாதர் கோயிலில் உள்ளது.பார்வதிதேவியின் தந்தை தட்சன், தன் பெருமையை பறைசாற்ற ஒரு யாகம் நடத்தினான். யாகத்திற்கு எல்லா தேவர்களையும் அழைத்தான். ஆனால் மருமகன் சிவனையும், மகளையும் அழைக்கவில்லை. கோபமடைந்த பார்வதி, தந்தையைத் தட்டிக் கேட்டாள். யாகத்தை தடுத்து நிறுத்த யாககுண்டத்தில் குதித்தாள். தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகசாலையை அழித்தார் சிவன். பைரவராக வடிவெடுத்து தட்சனையும் கொன்றார். இந்த புராண வரலாற்றின் அடிப்படையில் தான் எல்லா சிவாலயங்களிளிலும் பைரவர் சன்னதி உள்ளது. இந்த கோயிலில் உள்ள பைரவர் வித்தியாசமானவர். பொதுவாக அவர் கையில் திரிசூலம் இருக்கும். ஆனால் இங்கு சன்னதியின் பின்புறமுள்ள ஆனந்த பைரவர், கதாயுதம் வைத்துள்ளார். தன் பக்தர்களைக் கவுரவக்குறைச்சலாக நடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது 'கதையை' முடிப்பவர் என்பதால் 'கதை' தரப்பட்டுள்ளது. இங்கு தேசிகநாதர் என்று சிவனுக்கும், ஆவுடைநாயகி என்று அம்பாளுக்கும் பெயர். தேசிகர் என்ற சொல்லுக்கு தந்தை, குரு, வணிகர் என பல பொருளுண்டு. தந்தைக்கெல்லாம் தந்தை, குருவுக்கெல்லாம் குருவாக விளங்குபவர் என்ற பொருளிலும், பாவம் என்ற பணத்தை வாங்கிக் கொண்டு புண்ணியத்தை விற்கும் வணிகர் என்ற முறையிலும் இந்தப் பெயருக்கு அர்த்தம் கொள்வர். ஆவுடைநாயகி என்ற சொல்லில் 'ஆ' என்றால் 'பசு'. பசுக்களாகிய உலக உயிர்களை காப்பவள் என்ற பொருளில் அம்மனுக்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. மூலவர் தேசிகநாதர் என்றாலும், பைரவரே பிரதான தெய்வமாக உள்ளார். பக்தர்கள் பைரவரை வழிபட்ட பின்னரே அம்மன், சிவனை வணங்குகின்றனர். சிவனுக்கு காண்பிக்கும் தீபாராதனை தட்டை பக்தர்களிடம் காட்டுவதில்லை. பைரவர் சன்னதியில் காட்டும் தீபாராதனை தட்டை பக்தர்கள் தொட்டு வணங்க அனுமதி உண்டு. பைரவருக்கு முக்கியத்துவம் தரவே இதை செய்கின்றனர். எல்லா தேய்பிறை அஷ்டமி நாட்களிலும் பைரவருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், தீபாராதனை செய்வர். அதன்பின் பிரகாரத்தில் பைரவர் பவனி வருவார்.திருவிழாவில் விநாயகர், முருகன், சுவாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உலா வருவர். இங்கு சண்டிகேஸ்வரருக்குப் பதிலாக பைரவர் உலா வருவது மாறுபட்ட அம்சம். இங்குள்ள யோக தட்சிணாமூர்த்தியின் தலையில் கிரீடம் இருப்பது மற்றொரு வித்தியாசம். சுவாமி சன்னதியின் பின்புறமுள்ள நந்தி, சிம்மங்கள் தாங்கிய மண்டபத்தில் உள்ளார். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சுப்பிரமணியர், சரஸ்வதி, மகாலட்சுமி, நவக்கிரக சன்னதிகளும் உள்ளன. கோயில் முன்புள்ள வற்றாத குளத்தை பைரவ தீர்த்தம் என்கின்றனர். எதிரி தொல்லை நீங்க, திருமணத்தடை அகல, தொழிலில் முன்னேற பைரவரை வணங்க வரலாம்.எப்படி செல்வது: காரைக்குடியில் இருந்து 8 கி.மீ., விசேஷ நாட்கள்: கார்த்திகை சம்பக சஷ்டியின் போது ஆறுநாள் ஹோமம், மார்கழி தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் ஜென்மாஷ்டமிநேரம் : காலை 6:00 - 12:30 மணி; மாலை 4:00 - 7:30 மணிதொடர்புக்கு: 04565 - 281 575அருகிலுள்ள தலம்: காரைக்குடி கொப்புடையநாயகி கோயில்