உள்ளூர் செய்திகள்

லட்சியத்துடன் செயல்படுங்கள்

* நேரத்தைப் பயனுள்ள வழியில் செலவழிக்க வேண்டும். வெறும் கற்பனை இன்பம், கேளிக்கையில் ஈடுபட வேண்டாம். லட்சிய நோக்குடன் செயல்படுபவன் காணும் கனவு நனவாக மாறும்.* வாழ்வில் குறுக்கிடும் சோதனைகள், புதிய அனுபவ பாடத்தை கற்றுத் தரவே உண்டாகின்றன. அவற்றை விருப்பமுடன் ஏற்றால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.* தூக்கத்தில் இருந்து எழுந்தால் சூரிய உதயத்தை காண முடியும். அது போல அறியாமை என்னும் தூக்கத்தில் நாம் ஆழ்ந்திருக்கிறோம். அதிலிருந்து விழித்தால் மட்டுமே உண்மை என்னும் பரம்பொருளின் தரிசனம் கிடைக்கும்.* நாணயத்தின் இருபக்கம் போல இன்ப, துன்பம் கலந்ததே வாழ்க்கை. ஒரு பக்கத்தை ஏற்றுக் கொண்டு இன்னொரு பக்கத்தை நம்மால் தள்ளி விட முடியாது.* இன்றைய உலகம் இயந்திரமயமாகி விட்டது. மனநிலையும் இயந்திரமயமாகி வருகிறது. இதனால் அன்பு, பாசம், கருணை, மகிழ்ச்சி போன்ற பண்புகள் மறையத் தொடங்கி விட்டன.* 'எனக்கு எல்லாம் இருக்கின்றன; ஆனால் நான் எதுவுமே இல்லை. மேலான சக்தி என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது ' என்னும் உண்மையை நாம் உணர்ந்தே ஆக வேண்டும். அதற்காகவே மண்ணில் பிறவியெடுத்திருக்கிறோம்.சொல்கிறார் பஜனானந்தர்