காரமடை ரங்கநாதருக்கு அமாவாசை அபிஷேகம்
பெருமாள் கோயில்களில் திருமாலின் திருவடி பதித்த சடாரியை நம் சிரசில் வைத்து ஆசியளிக்கும் சடாரி சேவை விசேஷம். ஆனால், ராமனின் வில்லை சிரசில் வைத்து ஆசியளிக்கும் ராமபாண சேவையைப் பெற வேண்டுமானால், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகிலுள்ள காரமடை ரங்கநாதர் கோயிலுக்கு செல்ல வேண்டும். இங்கு அமாவாசை நாட்களில் பாலாபிஷேகம் நடக்கிறது. ஆடி அமாவாசையன்று இங்கு சென்று வாருங்கள்.தல வரலாறு: திருமாலின் வாகனமான கருடாழ்வார், சுவாமியின் திருமணக்கோலத்தை தரிசிக்க விரும்பினார். அவருக்கு சுவாமி, இத்தலத்தில் திருமணக் காட்சி தந்தார். மேலும் அவரது வேண்டுதலுக்காக, இங்கேயே எழுந்தருளினார். காலப்போக்கில் அந்த சிலை மறைந்துவிட்டது. பிற்காலத்தில் இங்கு காரை மரங்கள் வளர்ந்தது. அப்பகுதியில் ஒருவர் பசு மேய்த்து வந்தார். ஒரு பசு மட்டும் காரை மரத்தின் அடியிலிருந்த புதர் மீது பால் சுரந்ததைக் கண்ட அவர், புதரை வெட்டியபோது ரத்தம் பீறிட்டது. அப்போது ஒலித்த அசரீரி, பெருமாள் சிலை அவ்விடத்தில் இருப்பதாக கூறியது. மக்கள் அதை எடுத்து பிரதிஷ்டை செய்தனர். கோயிலும் எழுப்பப்பட்டது.ராமபாண ஆசிர்வாதம்: இக்கோயிலிலுள்ள உற்சவர் வெங்கடேசப்பெருமாள் சிலை, மூலவர் ரங்கநாதரை விட அளவில் பெரியது. சடாரி சேவை உற்சவர் சந்நிதியில் நடக்கிறது. ஆனால், மூலவர் ரங்கநாதர் சந்நிதியில், ராமபாணத்தால் ஆசிர்வாதம் செய்கின்றனர். இந்த பாணத்தில் கரம் மற்றும் ஆதிசேஷன் வடிவம் இருக்கிறது. ஆயுதபூஜையன்று பாணத்திற்கு பூஜை, திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது.மலைக்கோயிலில் தாயார்: சுவாமி சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மேனியில் வெட்டுப்பட்ட தழும்பு இருக்கிறது. தாயார் ரங்கநாயகி அருகிலுள்ள மலையில் காட்சி தருகிறாள். இவளை, 'பெட்டத்தம்மன்' என்கிறார்கள். பிற்காலத்தில், ரங்கநாதருக்கு வலப்புறத்தில் ரங்கநாயகிக்கு சந்நிதி கட்டப்பட்டது. மாசி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில், ரங்கநாதர் கோயில் அர்ச்சகர் மலைக்கோயிலுக்குச் சென்று, கலசத்தில் ரங்கநாயகியை ஆவாஹனம் செய்து இக்கோயிலுக்கு கொண்டு வருவார். அப்போது ராமபாணத்தை வெளியில் கொண்டு சென்று, தாயாரை வரவேற்கும் வைபவமும், தீர்த்தக்கலசத்திற்கு பூஜையும் நடக்கிறது. மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது. சுவாமி, மலைக்கோயில் தாயாரையே மணந்து கொள்வதாக ஐதீகம்.கவாள சேவை: மாசிமகத்தன்று சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். தேர் நிலைக்கு வந்ததும், பக்தர்கள் தேன், பழம், கற்கண்டு, சர்க்கரை, தேங்காய் கலந்த பிரசாதம் வைத்து, 'ரங்கன் வருகிறான், கோவிந்தன் வருகிறான்,' எனச்சொல்லி மற்றவர்களுக்கு கொடுக்கிறார்கள். இதனை, 'கவாள சேவை' என்பர். அப்போது சுவாமியின் பாதத்தில் தண்ணீர் தெளிக்கும் 'தண்ணீர் சேவை', தீப்பந்தம் ஏந்தி சுவாமியை வணங்கும் 'பந்த சேவை' ஆகியவை நடக்கிறது.சிறப்பம்சம்: அமாவாசைகளில் சுவாமிக்கு பாலபிஷேகம் நடக்கிறது. இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை, பெரிய சதுரக்கல்லில் வடிக்கப்பட்டிருக்கிறது. முன்மண்டபத்தில் ருக்மணி, சத்யபாமாவுடன் வேணுகோபாலர் காட்சி தருகிறார். இவருடன் நம்மாழ்வார், ராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகியோரும் உள்ளனர். பிரகாரத்தில் சந்தான கிருஷ்ணர், பரவாசுதேவர், நாகர், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன.திருவிழா: மாசியில் பிரம்மோற்ஸவம், ராமானுஜர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி.இருப்பிடம்: கோவை- மேட்டுப்பாளையம் வழியில் 30 கி.மீ., தூரத்தில் காரமடை.திறக்கும் நேரம்: காலை 5.30- பகல்1 , மாலை 4- இரவு 9.போன்: 04254- 272 318, 273 018.