உள்ளூர் செய்திகள்

குரு கோயில்கள்

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். வேலை கிடைக்க, திருமணம் நடக்க, குழந்தைப் பேறுக்கு, புகழ் கிடைக்க குரு பகவானின் அருள் வேண்டும். வாசகர்கள் அவரது அருளைப் பெறும் வகையில் இங்கு குரு கோயில்கள் இடம் பெற்றுள்ளன. வயிற்று வலி தீர... தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சிவனை வழிபட்டால் வயிற்றுவலி, நெருப்பு தொடர்பான தோஷம் தீரும். யாகத்தில் இடும் நெய் உள்ளிட்ட அவிசு உணவை சாப்பிட்ட அக்னிபகவானுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதிலிருந்து விடுதலை பெற சிவலிங்கம் ஒன்றை நிறுவியும், தீர்த்தம் ஒன்றை உருவாக்கியும் வழிபாடு செய்தார். இதனால் சுவாமிக்கு 'அக்னீஸ்வரர்' எனப் பெயர் வந்தது. அம்பிகையின் திருநாமம் சவுந்திர நாயகி. இங்குள்ள யோக தட்சிணாமூர்த்தி சன்னதி விசேஷமானது. குத்துக்காலிட்டு (குரங்காசனம்) அமர்ந்த இவர் கழுத்தில் ருத்ராட்சமும், தலையில் சூரிய, சந்திரனை அணிந்துள்ளார். கையில் சிவாகமச் சுவடி உள்ளது. இவரை 'ஞானநாயகன்' என போற்றுகிறார் திருநாவுக்கரசர். இவருக்கு வியாழன் அன்று முல்லைப்பூ சாத்தி நெய்தீபம் ஏற்ற திருமணத்தடை விலகும். வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும். இரண்டு குருபகவான்கள் இங்குள்ளனர். பிரம்மா இங்கு சிவபூஜை செய்துள்ளார். இசையில் சிறக்க... திருச்சிக்கு அருகிலுள்ள லால்குடி சிவனை வழிபட்டால் இசைத்துறையில் சிறக்கலாம். இங்கு வந்த அந்நிய தேசத்து மன்னர் ஒருவர் கோயில் கோபுரத்தைக் கண்டதும் லால்குடி (சிவப்பு கோபுரம்) என குறிப்பிட்டார். அப்பெயரே நிலைத்து விட்டது. சப்த ரிஷிகள் தவம் செய்து சிவதரிசனம் பெற்றதால் இத்தலம் 'தவத்துறை' எனப்பட்டது. சுவாமியின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். அம்மனின் திருநாமம் திருப்பிராட்டி. இங்கு நாரதரும் சுக்ர முனிவரும் தவமிருந்து சிவனிடம் இசை பற்றிய நுணுக்கங்களை கற்றுக் கொண்டனர். சிவனே குருநாதராக இருந்து சாம வேதம் முதலான சாஸ்திரங்களை உபதேசம் செய்தார். அதனால் இங்குள்ள தட்சிணாமூர்த்தி வீணை ஏந்தியபடி இருக்கிறார். சப்த ரிஷிகளான அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், ஆங்கிரசர், கவுதமர், மரீசி இங்கு வழிபட்டு சிவலிங்கத் திருமேனியில் ஐக்கியம் அடைந்தனர். இதன் அடையாளமாக சிவலிங்கத்தில் ஏழு புள்ளிகள் உள்ளன. சுவாமிக்கு தேன் அபிேஷகம் செய்து வழிபடுபவர்கள் இசைத்துறையில் சிறந்து விளங்குவர். தம்பதி ஒற்றுமைக்கு... ஆந்திரா சித்துார் மாவட்டம் நாகலாபுரம் அருகிலுள்ள தலம் சுருட்டப்பள்ளி. இங்கு வழிபட்டால் தம்பதியர் ஒற்றுமை சிறக்கும். விஷம் அருந்திய சிவன் இங்குள்ள பார்வதியின் மடியில் தலை வைத்து படுத்ததால் இத்தலத்திற்கு 'சுருட்டப்பள்ளி' எனப் பெயர் வந்தது. இங்குள்ள விநாயகர், முருகன், சிவன், பெருமாள், குருபகவான் என அனைத்து தெய்வங்களும் மனைவியுடன் உள்ளனர். இங்கு தான் முதன் முதலில் பிரதோஷம் வழிபாடு நடந்தது. காஞ்சி மஹாபெரியவர் இங்கு வந்து தரிசனம் செய்துள்ளார். இங்குள்ள குருபகவான் மனைவி தாராவுடன் காட்சி தருகிறார். களத்திர தோஷம், தம்பதி இடையே கருத்து வேறுபாடு, திருமணத்தடை விலக வியாழன் அன்று குருபகவானுக்கு நெய்தீபம் ஏற்றி பின்வரும் ஸ்லோகத்தை 12 முறை சொல்கின்றனர். தேவனாம்ச ரிஷிணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்!புத்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருகஸ்பதிம்!! தேவர்கள், ஞானிகளுக்கு குருவாகத் திகழ்பவரே! பொன் போல பிரகாசிப்பவரே! ஞானமே வடிவானவரே! மூவுலகங்களுக்கும் தலைவராக விளங்குபவரே! பிரகஸ்பதியே! உம்மை வணங்குகிறோம்.படிப்பில் சிறக்க...ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலம் குருபகவானை தரிசிக்கும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். குருபகவானின் தம்பி உத்திமுனிவரின் மகன் தீர்க்கதா. இவர் தனக்கு ஏற்பட்ட சாபத்தை இங்குள்ள நந்தியின் வாயில் கங்கையை வரவழைத்து சிவபூஜை செய்து போக்கிக் கொண்டார். அதனால் இங்குள்ள சிவனுக்கு 'ஜலநாதீசுவரர்' எனப் பெயர் ஏற்பட்டது. அம்மனின் பெயர் கிரிராஜ கன்னிகை. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் அடியில் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். வலக்காலைத் தொங்கவிட்டும், இடக்காலைக் குத்துக்காலிட்டும், தலையை இடது புறம் சாய்த்த நிலையில் இருக்கிறார். கையில் ருத்ராட்ச மாலை, மற்றொரு கையில் தாமரை உள்ளது. காலடியில் முயலகன் இல்லை. இவரை தரிசித்தால் அலைபாயும் மனம் கட்டுப்படும். புத்திக்கூர்மை அதிகரிக்கும். படிப்பில் சிறக்க குருபகவானுக்கு வியாழன் அன்று அபிஷேகம் செய்து மஞ்சள் வஸ்திரம் சாத்துகின்றனர். -முற்றும்ஜெ.விஜயராகவன்80560 41076