மாங்கல்யம் காப்பவள்
கும்பகோணம் அருகிலுள்ள திருமங்கலக்குடி பிராணநாதர் கோயில் மங்களாம்பிகையை தரிசித்தால் திருமணம் நடக்கும். சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். முற்பிறவியில் செய்த பாவத்தால் தனக்கு தொழுநோய் வரவிருப்பதை உணர்ந்தார் காலவ முனிவர். அதிலிருந்து விடுபட தவம் செய்தார். அதன் பயனாக காட்சியளித்த நவக்கிரகங்கள், 'இது விதிப்பயன் என்பதால் எங்களால் இதனை மாற்ற முடியாது' என்றனர். கோபம் கொண்ட முனிவர், 'உங்களுக்கு தொழுநோய் இப்போதே வரட்டும்' என சபித்தார். நோயால் அவதிப்பட்ட நவக்கிரகங்கள் இங்கு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து குணம் அடைந்தனர். காளி, பூமிதேவி, ஆகாசவாணி, மங்களாம்பிகை, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர் இங்கு சிவனை வழிபட்டுள்ளனர். முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் அலைவாணர். இவர் மன்னரிடம் அனுமதி பெறாமல், கோயில் கட்டுவதற்கு அரசு பணத்தை பயன்படுத்தினார். இதையறிந்து அமைச்சருக்கு மரண தண்டனை விதித்தார் மன்னர். தண்டனைக்குப் பின் தன் உடலை சொந்த ஊரான திருமங்கலக்குடிக்கு கொண்டு செல்லுமாறு அலைவாணர் வேண்டினார். அதன்படி உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கிடையே அமைச்சரின் மனைவி திருமங்கலக்குடி அம்மனைச் சரணடைந்தாள். அம்மனும் உயிர்பிச்சை தரும்படி சிவபெருமானிடம் முறையிட்டாள். சிவனருளால் அமைச்சர் உயிர் பெற்றதால் சுவாமிக்கு 'பிராண நாதர்' என்றும், அம்மனுக்கு 'மங்களாம்பிகை' என்றும் பெயர் வந்தது. மூலவர் சிவலிங்கத்தின் மேல்பாகமான பாணம், கீழ்பாகமான ஆவுடையாரை விட உயரமாக இருக்கும். தொடர்ந்து 11 ஞாயிறு அன்று எருக்க இலையில் தயிர்சாதம் நைவேத்யம் செய்ய கிரகதோஷம் விலகும். நடராஜர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்திற்கு தினமும் உச்சிக்காலத்தில் (மதியம் 12:00 மணி) பூஜை நடக்கிறது. மங்கள விநாயகர், மங்களாம்பிகை, மங்கள தீர்த்தம், மங்கள விமானம், திருமங்களக்குடி என அனைத்தும் மங்களகரமாக உள்ளது. எனவே இத்தலத்தை 'பஞ்ச மங்கள க்ஷேத்ரம்' என்கிறார்கள். மங்காளாம்பிகை தெற்கு நோக்கி அருள்கிறாள். அம்மனின் வலக்கையில் சாத்திய தாலிக்கயிறு சுமங்கலி பெண்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. இதை அணிவோருக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.எப்படி செல்வது: கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை வழியாக 17 கி.மீ., விசேஷ நாள்: தைவெள்ளி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, மகாசிவராத்திரி.நேரம்: காலை 6:30 - 12:30 மணி; மாலை 4:00 - 8:30 மணிதொடர்புக்கு: 97914 8188-0அருகிலுள்ள கோயில்: கும்பகோணம் கும்பேஸ்வரர் 17 கி.மீ., (நலமாக வாழ...)நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 4:00 - 9:30 மணிதொடர்புக்கு: 0435 - 242 0276