உள்ளூர் செய்திகள்

நவசக்தி தீபம்

நவ.25 - கார்த்திகை சோமவாரம்கார்த்திகை மாதத்துக்கு உரிய கிரகமான சூரியனின் அதிதேவதை சிவபெருமான். இந்த மாதத்தில் சிவன் கோயிலில் தீபம் ஏற்றினால் அதிக நன்மை கிடைக்கும். அதிலும் நவசக்தி தீப வழிபாடு நடக்கும் வேலுார் ஜலகண்டேஸ்வரரை(சிவன்) தரிசித்தால் பாவம் தீரும். நலம் சேரும். வேலமரங்கள் நிறைந்த காட்டில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து அத்திரி மகரிஷி வழிபட்டார். பிற்காலத்தில் அந்த சிவலிங்கம் புற்றுக்குள் மறைந்தது. இப்பகுதியை ஆட்சி செய்த மன்னரான பொம்மியின் கனவில் தோன்றிய சிவன், புற்றுக்குள் தான் புதைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி கோயில் கட்ட உத்தரவிட்டார். மன்னரும் கோயில் கட்டினார். அந்த சிவலிங்கத்திற்கு அடியில் நீர் சுரந்ததால் சுவாமிக்கு 'ஜலகண்டேஸ்வரர்' எனப் பெயர் சூட்டப்பட்டது.பத்ம விமானத்தின் கீழ் சுவாமி காட்சி தருகிறார். கருவறையின் பின்புறத்தில் வேங்கடேசப்பெருமாள் சன்னதி உள்ளது. சூரியன், சந்திரனை விழுங்கும் ராகு, கேது, தங்கம், வெள்ளியால் ஆன பல்லிகள் இங்கு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. ராகு, கேது தோஷம், பல்லி தோஷம் உள்ளவர்கள் இதை வழிபடுகின்றனர். தலவிருட்சமாக வன்னி மரம் உள்ளது. அகிலாண்டேஸ்வரி சன்னதியின் எதிரில், 'அணையா நவசக்தி ஜோதி தீபம்' உள்ளது. அம்பிகை தீப வடிவில் நவசக்திகளாக இங்கு இருக்கிறாள். வெள்ளி அன்று மேள தாளத்துடன், சாதம் நைவேத்யம் படைத்து தீபத்திற்கு பூஜை நடக்கிறது. கார்த்திகை கடைசி சோமவாரத்தில் 1008 சங்காபிஷேகம் நடக்கும்.பிரகாரத்தில் கிணறு வடிவில் கங்கை நதியும், அதன் அருகில் 'கங்கா பாலாறு ஈஸ்வரர்' சன்னதியும் உள்ளது. இவரை தரிசித்தால் காசியை தரிசித்த புண்ணியம் சேரும். தட்சிணாமூர்த்தி நான்கு சீடர்களுடன் உற்ஸவராக இருக்கிறார். சனீஸ்வரர் மனைவி ஜேஷ்டாதேவி, மகன் மாந்தியுடன் உள்ளார். மன்னர் பொம்மி கோயிலைச் சுற்றி பிரமாண்டமான கோட்டை, அகழி, கல்யாண மண்டபம் அமைத்தார். மண்டபத்தில் உள்ள வெண்ணெய்த் தாழி கிருஷ்ணர், பைரவர், நடராஜர், சரபேஸ்வரர் சிற்பங்கள் சிறப்பானவை. எப்படி செல்வது : வேலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில்.விசேஷ நாள் : சித்திரை பிரம்மோற்ஸவம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி.நேரம்: காலை 6:30 - 1:00 மணி; மதியம் 3:00 - 8:30 மணிதொடர்புக்கு: 98947 45768, 98946 82111, 0416 - 222 3412, 222 1229அருகிலுள்ள கோயில் : காங்கேயநல்லுார் முருகன் 7 கி.மீ., (நலமுடன் வாழ...)நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணிதொடர்புக்கு: 94869 39198, 94438 00039