உள்ளூர் செய்திகள்

பிரிந்தவர் சேர...

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வேணுகோபாலர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியன்று பாலுாட்டும் வைபவம் நடக்கிறது. இங்கு வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். பக்தரான சேர மன்னர் ஒருவருக்கு கிருஷ்ணர் கோயில் கட்டும் எண்ணம் எழுந்தது. ஒருநாள் கனவில் தோன்றி, ''புண்ணிய நதியான தாமிரபரணி கரையிலுள்ள புன்னை வனத்தில் கோயில் கட்டு'' என கிருஷ்ணர் உத்தரவிட்டார். அதன்படி திருப்பணி நடந்த போது பாமா, ருக்மணி சிலைகளை தலைமைச் சிற்பி வடிவமைத்தார். அவரது கனவில் தோன்றி, ''இது போன்ற அழகிய சிலைகளை இதுவரை நான் பார்த்ததில்லை. இங்குள்ள பாமா, ருக்மணியரை விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன்'' என கிருஷ்ணர் தெரிவித்தார். இங்குள்ள சுவாமி 'நித்ய கல்யாணப் பெருமாள்' எனப்படுகிறார். புல்லாங்குழலுடன் இருப்பதால் 'வேணு கோபாலர்' என்றும் பெயருண்டு. கருடசேவை, வைகுண்ட ஏகாதசி விழாக்களில் பாமா, ருக்மணி தாயார்களுடன் சுவாமி எழுந்தருள்கிறார். திருமணத் தடை நீங்கவும், கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர் சேரவும் துளசி மாலை சாத்தி நெய் விளக்கு ஏற்றுகின்றனர். சாளக்கிராம கல்லால் ஆனதால் சுவாமிக்கு எண்ணெய்க்காப்பு, பாலாபிஷேகம் மட்டும் நடக்கிறது. கிருஷ்ண ஜெயந்தியன்று கண்திறப்பு, சங்குப்பால் என்னும் பாலுாட்டும் வைபவம் நடக்கும். சுவாமியின் முன் தேங்காயின் மூன்று கண்களை அர்ச்சகர்கள் திறப்பர். இதன் மூலம் குழந்தை கிருஷ்ணர் கண் திறக்கிறார். பிறகு சங்கில் பாலுாட்டுவது போல பாவனை செய்து நெல்லை துாவி வழிபடுவர். நாடு செழிக்க வேண்டி இதைச் செய்கின்றனர். பின்னர் நெல் பிரசாதம் தரப்படும். இதை பயன்படுத்த விளைச்சல் பெருகும். எப்படி செல்வது : அம்பாசமுத்திரம் - ஊர்க்காடு செல்லும் வழியில் கோயில் உள்ளது.விசேஷ நாள் : கிருஷ்ண ஜெயந்தி, மார்கழி பாவை நோன்பு, வைகுண்ட ஏகாதசி.நேரம்: காலை 8:00 -- 10:30 மணி; மாலை 5:30 -- 8:00 மணிதொடர்புக்கு: 04634 - 251 445அருகிலுள்ள கோயில் : பாபநாசம் பாபநாசநாதர் 9 கி.மீ., (முன்வினை தீர...)நேரம்: அதிகாலை 5:30 --- 1:00 மணி; மாலை 5:30- - 8:30 மணிதொடர்புக்கு: 04634 - 223 268