ராகு கேது தோஷமா...
திருச்சி லால்குடிக்கு அருகிலுள்ள நம்புகுறிச்சியில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. இவரை தரிசிப்போருக்கு ராகு கேது தோஷம் நீங்கும். காளஹஸ்திக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு செல்லலாம். பஞ்சபூத தலமாகவும் இக்கோயில் உள்ளது. நாயக்கர் காலத்தில் வாஸ்து முறைப்படி கட்டப்பட்ட கோயில் இது. பாண்டிய நாட்டின் மன்னரான மலையத்துவஜ பாண்டியனுக்கு குழந்தைப் பேறு இல்லை. இதற்காக புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். அதில் மூன்று வயது குழந்தையாக பார்வதி தோன்றினாள். அவளுக்கு 'தடாதகை' எனப் பெயரிட்டு வளர்த்தார் மன்னர். வில், வாள் பயிற்சி, குதிரையேற்றம் என 64 கலைகளையும் கற்று தேறினாள். பருவ வயதை அடைந்ததும் தடாதகைக்கு பட்டம் சூட்டி பாண்டிய நாட்டின் ராணியாக்கினார். தன் குஞ்சுகளை பார்வையால் பாதுகாக்கும் மீனைப் போல, தடாதகையும் தர்ம வழியில் அரசாட்சி நடத்தி மக்களை பாதுகாத்தாள். இதனால், 'மீன் போல துாங்காமல் ஆட்சிபுரிபவள்' என்னும் பொருளில் 'மீனாட்சி' என பெயர் பெற்றாள். இந்த வரலாற்றின் அடிப்படையில் நாயக்க மன்னர்களின் காலத்தில் இங்கு கோயில் கட்டப்பட்டது. மீனாட்சியம்மன், சொக்கநாதர், ஞானாம்பிகை, காளஹஸ்தீஸ்வரர் சன்னதிகள் இங்கு உள்ளன. கோயிலின் முன்புறம் நந்தி ஆறும், கோயிலுக்குள் தீர்த்த கிணறும் உள்ளன. நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் சுவாமி சன்னதியில் நான்கு முக விளக்கு உள்ளது. இரட்டிப்பு பலன் பெற சிவபெருமானுக்குரிய திங்கள் அன்று, பிரதோஷம், சிவராத்திரி நாட்களில் வழிபடுகின்றனர். 50 ஆண்டாக பராமரிப்பு இன்றி கிடந்த இக்கோயிலில் திருப்பணி செய்யப்பட்டு ஜூலை 7, 2025 ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. திருப்பணிக்கு இயன்ற பொருளுதவி அளித்து உதவலாம். திருச்சி - பெரம்பலுார் நெடுஞ்சாலையில் பாடாலுாரில் இருந்து புள்ளம்பாடி செல்லும் வழியில் 7 கி.மீ., தொடர்புக்கு: சி.பிரசன்னம், 99438 81759கும்பாபிஷேக நன்கொடைக்கு A/C : 10848627580IFSC: SBIN0061254CIF NO: 80682816527SBI, கன்டோன்மென்ட் திருச்சி -- 620 001 GPay: 98405 90442/தேன்மொழி பிரசன்னம்