உள்ளூர் செய்திகள்

ராஜயோகம் தருபவர்

கும்பகோணம் அருகிலுள்ள திருவிசநல்லுார் சிவயோகிநாதர் கோயிலில் உள்ள சதுர்கால பைரவர்களை தரிசித்தால் ராஜயோகம் உண்டாகும். பிரம்மாவின் மகனான விஷ்ணுசர்மா தன் ஆறு சகோதரர்களுடன் சிவனை நோக்கி தவமிருந்தார். மகிழ்ந்த சிவன் அவர்களை ஏழு ஜோதிகளாக மாற்றி தன்னுடன் ஐக்கியப் படுத்தினார். அவரே இங்கு 'சிவயோகிநாதர்' என்னும் பெயரில் சுயம்புலிங்கமாக இருக்கிறார். பிறருக்கு தீங்கு செய்த பாவி ஒருவன் மரண பயத்தால் வருந்தினான். பாவத்திற்கு பரிகாரமாக சிவயோகிநாதரைச் சரணடைந்தான். மனமிரங்கிய சிவன் அவனுக்கு உதவி புரியுமாறு நந்திக்கு கட்டளையிட்டார். உடனே நந்தி தனது தலையை திருப்பி அவனைப் பார்க்க பாவம் நீங்கியது. இதனால் இங்கு வாசலைப் பார்க்கும் நிலையில் நந்தி உள்ளது.சவுந்தர்ய நாயகியம்மன் தெற்கு நோக்கி அருள்கிறாள். அகத்தியர், ஜடாயு வழிபட்ட தலம் இது. கேரள மன்னர் ஒருவர் பெண்ணாசையால் பாவச் செயல்களில் ஈடுபட்டார். ஒருமுறை மன்னரைக் காண வந்த துறவியின் உபதேசத்தால் மனம் திருந்தினார். திருவிசநல்லுாரின் மகிமையைக் கேள்விப்பட்ட மன்னர் பாவம் தீர காவிரியில் நீராடி சிவயோகிநாதரை தரிசித்தார். பெண்ணாசையால் பாவம் செய்தவர்கள் இங்கு வழிபடுவது நல்லது. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகத்திற்கு உரியவர்களான ஞானகால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என்னும் சதுர்கால பைரவர்கள் இங்குள்ளனர். கல்வியில் மேம்பட ஞானகால பைரவரையும், கடன் பிரச்னை தீர சொர்ண ஆகர்ஷண பைரவரையும், பதவி உயர்வு பெற உன்மத்த பைரவரையும், உடல்நலம், பேச்சுத்திறனில் சிறக்க யோக பைரவரையும் வழிபடுகின்றனர். ஞாயிறு தோறும் ராகுகாலத்தில் (மாலை 4:30 - 6:00 மணி) வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும். ரிஷப ராசியினரின் பரிகாரத்தலம் இது. 700 ஆண்டுக்கு முற்பட்ட சூரியஒளி கடிகாரம் உள்ளது. இங்கு வாழ்ந்த மகான் ஸ்ரீதர ஐயாவாளுக்கு கார்த்திகை மாத அமாவாசையன்று சிறப்பு பூஜை நடக்கிறது. எப்படி செல்வது: கும்பகோணத்தில் இருந்து வேப்பத்துார் வழியாக 8 கி.மீ.,விசேஷ நாள்: சித்திரை மாதம் முதல் மூன்றுநாள் சூரியஒளி பூஜை, ஐப்பசி கடைசி நாள் காவிரி தீர்த்தவாரி, கார்த்திகை சோமவாரம், மகா சிவராத்திரி, பிரதோஷம்நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 4:30 - 8:30 மணிதொடர்புக்கு: 94447 47142, 0435 -- 200 0679அருகிலுள்ள கோயில் திருவிடைமருதுார் மகாலிங்கசுவாமி 4 கி.மீ., (நிம்மதி பெற...)நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 0435 - 246 0660