உள்ளூர் செய்திகள்

தன்னம்பிக்கையுடன் வாழ...

தன்னம்பிக்கையுடன் வாழ ஆசையா... ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் உள்ள நம்புநாயகி கோயிலுக்கு செல்லுங்கள். தட்சிணத் துருவன், பச்சிமத் துருவன் என்னும் முனிவர்கள் இங்கு தவம் செய்தனர். அவர்களுக்கு காளி வடிவில் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி தோன்றி வரம் கொடுத்தாள். இவள் தெற்கு நோக்கியபடி 'தட்சிண காளி' பெயரில் இங்கு கோயில் கொண்டாள். இத்தலத்தில் ஆஸ்ரமம் அமைத்து நோயாளிகளுக்கு முனிவர்கள் இருவரும் சிகிச்சை அளித்தனர். பிற்காலத்தில் ராமேஸ்வரம் பகுதி முழுவதும் இலங்கை மன்னரின் பிடியில் சிக்கியது. சிங்கள மன்னர் சூலோதரன் இங்குள்ள மணற்குன்றில் கோட்டை அமைத்து ஆட்சி செய்தார். நோயால் அவதிப்பட்ட பவுத்த மதத்தை சேர்ந்த மன்னர், இங்குள்ள காளியின் பெருமையை கேள்விப்பட்டு கோயிலின் அருகிலேயே குடில் அமைத்து தங்கினார். தன் சகோதரர்கள், அமைச்சர்களின் கேலிப்பேச்சுக்கு ஆளானார் மன்னர். இருந்தாலும் நம்பிக்கையுடன் இங்குள்ள நன்னீர் தடாகத்தில் நீராடியதால் நோய் மறைந்தது. மன்னர் கோயிலுக்கு திருப்பணி செய்ததோடு நோயாளிகளுக்கு விடுதியும் அமைத்தார். இதன்பின் 'நம்பு நாயகி' என அம்மனுக்கு பெயர் வந்தது. மன்னரைக் கேலி செய்தவர்கள் நோய்க்கு ஆளாயினர். இதனால் 'நம்பு நாயகியை வணங்கினால் வம்பு இல்லை' என்ற சொலவடை உருவானது. மராட்டிய பிராமணர்களின் குலதெய்வம் இவள். இங்குள்ள நோய் தீர்க்கும் குளங்களுக்கு 'சர்வரோக நிவாரண தீர்த்தம்' எனப் பெயர். தீராத நோய், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு அதிகம் வருகின்றனர். எப்படி செல்வது: ராமேஸ்வரம் - தனுஷ்கோடி சாலையில் 3 கி.மீ., விசேஷ நாள்: மாதப்பிறப்பு, அமாவாசை, நவராத்திரி.நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:30 - 8:30 மணிஅருகிலுள்ள கோயில்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி 2 கி.மீ., (பித்ரு தோஷம் தீர...)நேரம்: அதிகாலை 4:00 - 1:00 மணி; மதியம் 3:00 - 8:30 மணிதொடர்புக்கு: 04573 - 221 223