தாயின் ஆசிக்கு...
கேரளா மூணாறு மூலக்கடை பார்வதி கோயிலில் தாயின் அன்புக்கு கட்டுப்பட்டு விநாயகரும், முருகனும் அம்மனின் அருகிலேயே உள்ளனர். இங்கு வழிபடுவோருக்கு தாயாரின் அன்பும் ஆசியும் கிடைக்கும். பழங்காலத்தில் மூணாறு மலையைச் சேர்ந்த வேடுவர்கள் இங்கு அம்பிகையை வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் அந்த இடத்தில் பார்வதியம்மன் கோயில் கட்டப்பட்டது. கிழக்கு நோக்கி உள்ள அம்மனின் கையில் திரிசூலமும், வாகனமாக சிங்கமும் உள்ளது. தினமும் மூன்று கால பூஜை நடக்கிறது. பிரகாரத்தில் நவக்கிரகம், சைவக் கருப்பசாமிக்கு சன்னதிகள் உள்ளன. வெள்ளி, ஞாயிறன்று நடக்கும் ராகுகால பூஜையில் பங்கேற்றால் கிரகதோஷம் விலகும். திருமணத்தடை நீங்கும். வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் மூணாறு முருகன் இந்த கோயிலுக்கு எழுந்தருள்கிறார். வைகாசி விசாகத்தன்று இங்கு வழிபட்ட பின்னரே மூணாறு முருகன் கோயிலுக்கு பால்குடங்களை பக்தர்கள் சுமப்பர். ஆடிப்பூரத்தன்று பார்வதி அம்மனுக்கு வளைகாப்பு நடக்கும். அதை அடுத்து வரும் வெள்ளியன்று அம்மனுக்கு அணிவித்த வளையல்கள் பிரசாதமாக தரப்படும். இதை கன்னிப்பெண்கள் அணிந்தால் திருமணத்தடை விலகும். மணமான பெண்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். நவராத்திரியின் போது திருப்பதி பாலாஜி, குபேர லட்சுமி, சாகம்பரி கோலங்களில் பார்வதியம்மனை தரிசிக்கலாம். திருக்கார்த்திகை தீபத்திற்கு முதல்நாளன்று வேடர்களின் பாரம்பரிய முறையில் தேன், தினை மாவு படைத்து வழிபாடு செய்வர். அப்போது வேடர் தலைவரான ஊர்காணி நாட்டாமைக்கு பரிவட்டம் கட்டும் விழா நடக்கும். எப்படி செல்வது: மதுரையில் இருந்து தேனி 77 கி.மீ., தேனியில் இருந்து மூணாறு 84 கி.மீ., விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94469 33612அருகிலுள்ள கோயில் : மூணாறு முருகன் கோயில் 1 கி.மீ., (நிம்மதிக்கு...)நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:30 - 7:30 மணிதொடர்புக்கு: 94474 70935