விஷபயம் தீர...
மகாவிஷ்ணுவின் கையில் சங்கு, சக்கரத்தை பார்த்திருப்பீர்கள். ஆனால் கும்பகோணம் அருகிலுள்ள வெள்ளியங்குடி கோயிலில் உள்ள கருடன் கையில் சங்கு, சக்கரத்தை ஏந்தி இருக்கிறார். நான்கு கைகளைக் கொண்ட இவரை வழிபட்டால் கிரக தோஷம், விஷபயம் தீரும். வாமனர் வடிவில் தோன்றிய மகாவிஷ்ணு மூன்றடி மண்ணை தானம் கேட்டு மகாபலி சக்கரவர்த்தியிடம் வந்தார். வந்திருப்பவர் கடவுள் என்பதை அறியாமல் மகாபலியும் சம்மதித்தார். தானம் கொடுப்பதை தடுக்க எண்ணிய அசுரகுருவான சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி, வாமனரின் தாரா பாத்திரத்தின் (கெண்டி) துவாரத்தில் தீர்த்தம் வராமல் தடுத்தார். வாமனர் தர்ப்பை புல்லால் துவாரத்தைக் குத்தவே, வண்டான சுக்கிராச்சாரியாரின் பார்வை போனது. இழந்த பார்வையைப் பெற இத்தலத்தில் சுக்கிராச்சாரியார் வழிபட்டார். இதனால் வெள்ளியங்குடி என இத்தலம் பெயர் பெற்றது. 'வெள்ளி' என்பது சுக்கிராச்சாரியாரின் மற்றொரு பெயர். கருவறையில் அணையா தீபமாக இவர் இருக்கிறார்.வெள்ளி அன்று வழிபட்டால் பார்வை குறைபாடு, சுக்கிர தோஷம் நீங்கும். மூலவரின் பெயர் கோலவில்லி ராமர். தாயாரின் திருநாமம் மரகதவல்லி. கிழக்கு நோக்கியபடி பள்ளி கொண்ட நிலையில் ராமர் இருக்கிறார். இவருக்கு பாற்கடல்நாதர் என்றும் பெயருண்டு. ஒருமுறை அசுரர் குல சிற்பியான மயனுக்கு சங்கு சக்கரத்துடன் மகாவிஷ்ணு கருட வாகனத்தில் இங்கு காட்சியளித்தார். அப்போது அவரிடம், 'தங்களை வில்லேந்திய ராமராக தரிசிக்க விரும்புகிறேன்' என்றான் மயன். தன் கையிலிருந்த சங்கு, சக்கரத்தை கருடனிடம் கொடுத்து விட்டு, ராமனாக தரிசனம் கொடுத்தார். சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் கருடன் இங்கு தங்கினார். திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே கருடன் நான்கு தோள்களுடன் இருக்கிறார். சுக்கிர, பிரம்ம, பரசுராம, இந்திர தீர்த்தங்கள் இங்குள்ளன. எப்படி செல்வது: கும்பகோணம் - அணைக்கரை சாலையில் சோழபுரம் 8 கி.மீ. இங்கிருந்து பிரியும் சாலையில் 6 கி.மீ., விசேஷ நாள்: கருடஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி.நேரம்: காலை 8:00 - 12:00 மணி; மாலை 5:00 - 6:30 மணிதொடர்புக்கு: 94433 96212, 98410 16079அருகிலுள்ள கோயில்: கும்பகோணம் சாரங்கபாணி 14 கி.மீ., (தைரியமுடன் வாழ...)நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணிதொடர்புக்கு: 94435 24529