காஞ்சிமுனிவர் திருவாக்கில் திருமுருகன்
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் முருகப்பெருமானுக்கு கோயில் உள்ளது. தமிழக கோயில்களின் கட்டடக்கலை போல அமைந்துள்ள இக்கோயிலை 'கார்த்திக் மந்திர்' என்பர். பஞ்சாபில் வாழும் தமிழ் மக்களின் இதயப்பகுதியாக திகழ்கிறது இக்கோயில். சண்டிகரில் வாழும் தமிழர்களால் கட்டப்பட்ட கோயில் இது. ''சுவாமிக்கு 'கார்த்திகேயன்' என்னும் பெயர் சூட்டுங்கள்; திருப்பணிக்கான பணம் தானாக வந்து சேரும், புகழ் பெற்று விளங்கும், உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்'' என இக்கோயில் கட்டும் முன்பே ஆசியளித்தவர் ஆதிசங்கரரின் மறுஅவதாரமான காஞ்சி மஹாபெரியவர். சங்க கால மரபுப்படி இங்கு பக்தர்கள் சிறு மேடை அமைத்து வேலிற்கு வழிபாடு நடத்தி வந்தனர். 2002ல் எண்ணற்ற பக்தர்களின் திருவுள்ளத்தால் தற்போதுள்ள கோயில் உருவாக்கப்பட்டது. பத்தாண்டுகளுக்கு பிறகு ராஜகோபுரம் உருவாக்கப்பட்டு கும்பாபிேஷகம் நிகழ்த்தப்பெற்றனர். காஞ்சிபுரம் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பூரி சங்கராச்சாரியார் இங்கு வருகை புரிந்துள்ளனர். வள்ளி தெய்வானையுடன் மூலவர் கார்த்திகேயன் நின்ற கோலத்தில் இருக்கிறார். சிவபெருமான், பெருமாள், அனுமன் சன்னதிகளும் உள்ளன. கோயிலின் 33 துாண்களில் 11 லட்சம் ராம நாமங்கள், அனுமன் சன்னதியில் 1 கோடியே 31 லட்சம் ராம நாமங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 'பாப விமோசன நர்மதேஸ்வரர்' என்னும் பெயரில் சிவபெருமான் சன்னதி உள்ளது. நர்மதை ஆற்றில் கிடைத்த கல்லால் வடிவமைக்கப்பட்டவர் என்பதால் இப்பெயரிலேயே அழைக்கின்றனர். பிரதோஷ பூஜை, பவுர்ணமியன்று சத்ய நாராயண பூஜையும் சிறப்பாக நடக்கிறது. அருகே ஐயப்பன், பாலாஜி, மானசா, சண்டி தேவி கோயில்களும் உள்ளன. கந்த சஷ்டி திருவிழா நாட்களில் இங்குள்ளவர்கள் (பல மொழி பேசுபவர்கள்) பரஸ்பரமாக நலம் விசாரித்துக் கொள்வது இங்குள்ள சிறப்பம்சமாகும். எப்படி செல்வது: டில்லியில் இருந்து பானிபட் வழியாக 240 கி.மீ., சண்டிகர் 31டி செக்டாரில் கோயில் உள்ளது. விசேஷ நாள்: வைகாசி விசாகம் கந்தசஷ்டி, திருக்கார்த்திகை பங்குனி உத்திரம்நேரம்: காலை 7:00 - 1:00 மணி; மாலை 6:00 - 8:00 மணிதொடர்புக்கு: 0172 - 261 1191அருகிலுள்ள தலம்: சண்டிகர் ஜகந்நாத் மந்திர் (மனஅமைதிக்கு) நேரம்: அதிகாலை 5:00 - இரவு 9:00 மணி