உள்ளூர் செய்திகள்

கஷ்டம் தீர்க்கும் அன்னூர் சிவன்

முன்னோர்கள் தெரியாமல் செய்த பாவம் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. மிகவும் கஷ்டப்படுகிறோம் என கவலை கொள்பவரா நீங்கள். ஒருமுறை கோயம்புத்துாரில் இருக்கும் அன்னுார் மன்னீஸ்வரர் கோயிலுக்கு வாருங்கள். 21 தீபங்களை ஏற்றி வழிபாடு செய்யுங்கள். வாழ்வு சுபிட்ஷமாகும். முன்பு காடாக இருந்த இப்பகுதியில் அன்னி என்ற வேடன் வசித்து வந்தான். பறவை, விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுவது பாவம் என்பதை உணர்ந்த அவன், அங்கு கிடைக்கும் காய், கிழங்கு, பழங்களை சாப்பிட்டு வந்தான். ஒரு நாள் வழக்கம் போல் பூமியில் கிடைக்கும் கிழங்கினை உணவிற்காக எடுக்கும் போது அதிலிருந்து ரத்தம் பீறிட பயந்து சென்று அரசரிடம் தெரிவித்தான். அதிலிருந்து சிவலிங்கம் வெளிப்பட்டது. அதைப்பார்த்தவர்களும் வணங்கினர். பிறகு ராஜ குருவின் ஆலோசனைப்படி அம்மன்னனால் கட்டப்பட்ட கோயில் தான் அன்னியூர் மன்னீஸ்வரர் கோயில். கருவறையில் உள்ள சுவாமி மணல் நிறத்தில் உள்ளார். லிங்கத்தின் இருபுறமும் பறவைக்கு இறக்கை இருப்பது போன்ற வடிவத்தில் உள்ளது. உற்றுப் பார்த்தால் கருடன் தனது இறக்கைகளை மடக்கி வைத்து அமர்ந்திருப்பது போல காட்சியளிக்கும். கருடன் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கீழே இருக்கும் சிறிய பொருளையும் கவனிக்கும் திறமை கொண்டது அதைப்போல மனிதர்களின் பாவ புண்ணியங்களை இந்த மன்னீஸ்வரர் எப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்பதை இந்த சுவாமி உணர்த்துகிறது. இவரை தொழில், வியாபாரம் சிறப்படையவும், முன்ஜென்ம வினைகள் தீரவும் வழிபடுவது சிறப்பு. மேற்கு திசை பார்த்த திருத்தலம் இது. ஆயிரத்து ஐநுாறு ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் இது. 7 நிலை ராஜகோபுரத்துடன் காணப்படும் இக்கோயிலின் முன் கருடத்துாண் காணப்படுகிறது. நாயன்மார்களின் ஒருவரான திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தேவார வைப்புத்தலம். இப்பகுதியை ஆண்ட மன்னர்களின் வரலாறுகளை அறிய இக்கோயிலில் 51 கல்வெட்டு உள்ளன. இங்குள்ள அம்மன் பெயர் அருந்தவச்செல்வி தனி சன்னதியில் அருள் செய்கிறாள். விநாயகர், முருகன், பிரம்மா, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சூரியன், சந்திரன், அறுபத்துமூவருக்கு சன்னதிகளும் உள்ளன. இக்கோயில் அருகே சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் இவ்வூர் காவல் தெய்வமாக அருள் செய்கின்றனர்.எப்படி செல்வது: திருமுருகன்பூண்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக 23 கி.மீ.,விசேஷ நாள்: திருக்கார்த்திகை சிவராத்திரி, அமாவாசை, பவுர்ணமிநேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:30 - 8:30 மணிதொடர்புக்கு: 98422 38564, 63690 24251அருகிலுள்ள தலம்: அவிநாசி அவிநாசியப்பர் கோயில் 25 கி.மீ., (இழந்த பொருள் கிடைக்கும்)நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 4:30 - 8:30 மணிதொடர்புக்கு: 94431 39503