உள்ளூர் செய்திகள்

சனாதன தர்மம் - 10

வானத்தைப் போல...ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே வரும் சூரியக்கதிரில் துகள்கள் மிதந்து செல்வதை பார்த்திருப்பீர்கள். அது போல பிரபஞ்சத்திலும் கணக்கில்லாத கோள்கள் சுற்றித் திரிகின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் இயங்குகின்றன. பிரபஞ்சம் என்றால் 'பரந்து விரிந்தது' என பொருள். அறிவியலாளர்கள் உலகம் உருண்டை எனவும் பால்வெளியில் ஏராளமான கோள்கள் உலவுகின்றன எனவும் கண்டுபிடித்துக் கூறுவதற்கு ஆயிரம் ஆண்டுக்கு முன்பே சொன்னது சனாதன தர்மம். மகாபாரத போருக்கு முன்பு களப்பலி கொடுப்பதற்காக நாள் பார்க்க விரும்பிய துரியோதனன் ஜோதிட நிபுணரான சகாதேவன் உதவியை நாடினான். எதிரிக்கும் கூட ஜோதிட சாஸ்திர முறைப்படி நல்ல நாளை கணித்துச் சொன்னான் சகாதேவன். இதையறிந்த பகவான் கிருஷ்ணர், 'எதிரிக்கு ஏன் நாள் குறித்து கொடுத்தாய்' எனக் கேட்ட போது 'களப்பலி கொடுக்க அமாவாசை தான் ஏற்றது என்பதால் அதை குறித்துக் கொடுத்தேன்' என்றான் சகாதேவன்.திடுக்கிட்ட கிருஷ்ணர் அமாவாசையன்று களப்பலி கொடுத்தால் வெற்றி கவுரவர்களுக்கே என்றான். பாஞ்சாலியும், பாண்டவர் ஐவரும் கிருஷ்ணரின் பாதம் பற்றினர் கண்ணீருடன். அதன்பின் பகவான் சாதுர்யமாக அமாவாசைக்கு முதல் நாளன்று ஆற்றில் இறங்கி களப்பலி, தர்ப்பணம் கொடுக்கத் தயாரானார். வானில் இருந்த சூரியன், சந்திரனும் இதைக் கண்டு, ''நாளை தானே அமாவாசை! இன்றே கிருஷ்ணர் தர்ப்பணம் கொடுக்க தயாராகி விட்டாரே?'' என்ற சந்தேகமுடன் அங்கு வந்தனர். 'நீங்கள் இருவரும் சந்திக்கும் நாள் தானே அமாவாசை. இதோ பூமியில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து விட்டீர்களே... எனவே இன்றே அமாவாசை' என்று கிருஷ்ணர் சொல்லவே சூரியனும் சந்திரனும் அதை ஏற்று விடைபெற்றனர். அன்றே களப்பலி கொடுக்கப்பட்டது. பாண்டவர்கள் போரில் வெற்றியும் கண்டனர். சூரியன், சந்திரன், பூமி மூன்றும் நேர்கோட்டில் இருக்கும் நாளே அமாவாசை என இன்று அறிவியல் சொல்வதை கலியுகத்திற்கு முன்பிருந்த துவாபர யுகத்திலேயே சொன்னது சனாதனம். எங்கும் நிறைந்த ஆகாயம், பரந்து விரிந்த கடல் என எல்லாம் நீலநிறமாக காட்சியளிக்கின்றன. நீல நிறம் மட்டுமே அதிக விரியும் தன்மை கொண்டது. எங்கும் நிறைந்த கடவுளர்களான கண்ணன், காளியின் நிறம் நீலமே. விநாயகர் அகவல் பாடலில் 'நீலமேனியும்' என்று அவ்வையார் முதற்கடவுளான விநாயகரைக் குறிப்பிடுகிறார். பூமியெங்கும் சனாதன தர்மம் தழைத்திருந்தது என்பதற்கு அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்படும் சிவலிங்கங்களே சாட்சி. வானவியல் சாஸ்திரத்தில் ஞானம் பெற்ற நம் முன்னோர்கள், அறிவியல் சொல்லும் அத்தனை கூறுகளையும் 'பஞ்சாங்கம்' என்ற பெயரில் தொகுத்துள்ளனர். ஆரியபட்டா, வராக மிகிரர், பதஞ்சலி மகரிஷி போன்றவர்கள் நம் பாரத தேசத்தின் வானியல் சாஸ்திர முன்னோடிகள். கருவிகளின் உதவி இல்லாமலேயே அமாவாசை, பவுர்ணமி நாட்களை துல்லியமாக கணித்தனர். இன்றும் கணித்துச் சொல்லும் அறிவாளிகள் நம்மிடையே உள்ளனர். சந்திரயான் விண்கலம் முதன் முதலில் அனுப்பிய புகைப்படத்தில் சந்திரனுக்கு அருகில் செவ்வாய் கிரகமும் இருப்பது தெரியவந்தது. பஞ்சாங்கத்திலும் அன்றைய நாளில் சந்திரன், செவ்வாய் இரண்டும் ஒரே ராசியில் இருந்தன. 'வானை அளப்போம்; விண்மீனை அளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என்ற மகாகவி பாரதியாரின் வரிகள் அறிவியலை மட்டுமின்றி சனாதன தர்மத்தின் வெற்றியை எடுத்துரைக்கிறது. -தொடரும்இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்93617 89870