கோரிக்கைக்கு செவி சாய்க்கும் அம்மன்
திருநெல்வேலியில் ஜீவ நதியாக பாயும் தாமிரபரணி கரையில் அமைந்த முக்கிய தீர்த்த கட்டங்களில் ஒன்று கருப்பன் துறை. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறவில்லையா... இங்கு வாருங்கள் உடனே பதில் கிடைக்கும்.தன்னை மதியாமல் யாகம் நடத்திய தட்சனுக்கு தகுந்த பாடம் புகட்ட நினைத்தார் சிவபெருமான். அதனால் உக்கிர வடிவமான பைரவ வேடம் எடுத்து தட்சன் தலையை கொய்தார். பின்னர் தாமிரபரணி அருகே இருந்த மேலநத்தத்தில் மேற்கு பார்த்து கோயில் கொண்டார். அதனால் அவருக்கு அக்னீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது.அவருடைய உக்கிரத்தினால் கருப்பந்துறை, கரிக்காதோப்பு, கருங்காடு பகுதிகளில் உள்ள பயிர்கள் யாவும் கருகின. அது குறித்து மக்கள் அங்கு ஆட்சி செய்த மன்னரிடம் தெரிவித்தனர். அவரும் அத்ரி வனத்தில் இருக்கும் குருநாதரான கோரக்க சித்தரிடம் வேண்டினார். அவரும் அக்னீஸ்வரரின் உக்கிரமே பயிர்கள் கருகுவதற்கு காரணம் என ஞானத்தால் அறிந்தார். சாந்தப்படுத்த தவவலிமையால் அவருக்கு எதிரே லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பவுர்ணமி தோறும் வழிபட்டு பயிர்களை அழிவில் இருந்து காத்தார். அதனால் அவருக்கு அழியாபதீஸ்வரர் என பெயர் வந்தது. இவரை ஒவ்வொரு பவுர்ணமி தோறும் சித்தர்கள் வழிபாடு செய்கின்றனர். பக்தர்களின் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேற சிவகாமசுந்தரி என்ற பெயரில் அருள்பாலிக்கும் அம்பிகையின் சிரம் சாய்ந்த நிலையில் உள்ளது. சுவாமி, அம்பாள் சன்னதியில் ஏற்றப்படும் தீபம் மூன்றில், இரண்டு தீபம் மட்டும் அசைந்தால் நமது கோரிக்கை நிறைவேறும் என்பது நம்பிக்கை. விளக்கெரிய எண்ணெய் வாங்கி கொடுத்து நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். இங்கு விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், பூதநாத சாஸ்தா, பகவதி அம்மன் சன்னதிகள் உள்ளன. எப்படி செல்வது: திருநெல்வேலி டவுனில் இருந்து 3 கி.மீ.,விசேஷ நாள்: ஐப்பசி திருக்கல்யாணம், மகாசிவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி.நேரம்: காலை 8:00 - 11:30 மணி;மாலை 5:00 - 7:30 மணிதொடர்புக்கு: 93610 61610, 98944 68478அருகிலுள்ள தலம்: நெல்லையப்பர் கோயில் 5 கி.மீ., (துன்பம் அகல...)நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 4:00 - 9:00 மணிதொடர்புக்கு: 0462-233 9910