தலவிருட்சங்கள் - 36
UPDATED : பிப் 02, 2024 | ADDED : பிப் 02, 2024
மதுரை முக்தி நிலையம் சத்ய யுக சிருஷ்டி கோயில் - 27 தலவிருட்சங்கள்இயற்கை வழிபாட்டில் மரங்கள் கடவுளாக வணங்கப்பட்டன. இதை 'கடவுள் மரத்த' என புறநானுாறும் 'கடவுள் முதுமரத்து' என நற்றிணையும் குறிப்பிடுகிறது. தலமரங்கள் காய்ந்தாலும் எஞ்சியிருக்கும் அடிமரத்தை கடவுளாக வணங்குவதை “மலரணி மெழுக்க மேறிப் பலர் தொழ வம்பலர் சேர்க்கும் கந்துடைப் பொதியில்” என பட்டினப்பாலை பாடுகிறது. கோயில்களில் உள்ள பட்டுப்போன அடிமரங்களை வெள்ளி, செம்பு, தங்கத் தகடுகளால் வேய்ந்து வழிபட்டனர். தலமரங்கள் 'தெய்வத்தரு' என அழைக்கப்பட்டதாக 'தெய்வத்தரு வளரும் பொழிற் புறவஞ் சிலம்பனுார்' என திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார். தெய்வத்தன்மை பொருந்திய மரங்களில் தெய்வம் அமர்ந்திருப்பதாக குறிப்பிட்டு 'வெண்ணாவல் விரும்பும் மயேந்திரரும்', 'குறும்பலா மேவிய கொல்லேற்றண்ணல்' என தேவாரம், திருவாசகம் போன்ற நுால்கள் போற்றுகின்றன. தலமரங்களின் இலை, பூ, பழம், விதை, பட்டை ஆகியன வழிபாட்டுக்கு உரியவை. தலமரத்தின் பாகங்களில் இருந்து தீர்த்தம், பிரசாதம் செய்யப்பட்டு நோய் நீங்கும் மருந்துகள் பக்தர்களுக்குத் தரப்பட்டன. இயற்கையை பாதுகாப்பதிலும், வழிபாட்டை பின்பற்றுவதிலும் கோயில்கள், ஆன்மிகத் தலங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. திருவாலங்காடு, திருப்பனையூர், திருவிளாநகர், கடம்பவனம், திருக்கடவூர், மருதுார், புன்னைநல்லுார் போன்ற ஊர்களின் பெயர்கள் தலமரங்களின் பெயர்களாலே அழைக்கப்படுகின்றன. அழிந்து கொண்டிருக்கின்ற மரங்கள் தலவிருட்சங்களாக பாதுகாக்கப்பட்டன. கோயில் பூஜைக்கும், அன்னதானத்திற்கும் தேவையான பூக்கள், பழங்கள், கோயில் நந்தவனங்களில் இருந்தே அக்காலத்தில் பெறப்பட்டது. கோயிலில் உள்ள தெப்பங்கள் பக்தர்கள் நீராடுவதற்காக பயன்படுத்தப்பட்டன. நோய்களை தீர்க்கும் அபிஷேக பால், எண்ணெய், நெய், மருந்து அப்பம், அடை, தீர்த்தம், மூலிகை ஊறல்நீர், களி, திருநீறு, செந்துாரம் ஆகியன அன்றாடம் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்பட்டன. நோய் தீரவும், அமைதி, நிம்மதி வேண்டியும், குடும்பம், தொழில் பிரச்னை விலகவும் கோயிலில் வழிபட வரும் பக்தர்கள் ஏராளம். கோயில் மணி, மந்திரம், ஓசை மனதிற்கு அமைதியை தருகின்றன. நெய் தீபங்கள் அக்னி ரூபமாக மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. கோயிலின் நந்தவனத்தில் இருந்து வீசும் தென்றல் மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. கோயில்களே நலம் அளிக்கும் மருத்துவசாலைகளாகத் திகழ்ந்தன. முற்காலத்தில் சித்தர்கள் வாழ்ந்த இடங்கள், தற்காலத்தில் கோயில்களாக வணங்கப்படுகின்றன. அந்தக் காலத்தில் மட்டுமல்ல இன்றும் கோயில் கருவறையில் சுயம்பு மூர்த்தியாக அருள்புரியும் கடவுள் தரிசிக்க வரும் பக்தர்களின் கவலை, துன்பங்களை போக்கி வருகிறார். நட்சத்திரம், ராசி, கிரகம், திசை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மலர், செடி, கொடிகளை அர்ப்பணித்து வழிபாட்டை பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் பின்பற்றி வருகிறோம். ஒன்று முதல் ஐந்துக்கும் மேற்பட்ட மரங்களை தலவிருட்சமாக கொண்ட கோயில்கள் தமிழகத்தில் பல உள்ளன. ஆனால் நட்சத்திரங்களுக்கு உரிய 27 மரங்களை தலவிருட்சமாக கொண்ட ஒரே தலம் சத்யயுக சிருஷ்டி கோயில் என்னும் முக்தி நிலையம். இங்கு 108 சன்னதிகளில் 243 கடவுளரின் விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சித்தர்களின் குண்டலினி சக்தியை குறிக்கும் விதமாக முக்தி ஸ்துாபி என்ற கல்துாண் உள்ளது. மீனாட்சி - சுந்தரேஸ்வரர், மகாவிஷ்ணு - மகாலட்சுமி, இந்திரன் - இந்திராணி, கிருஷ்ணர் - ராதை, ராமர் - சீதா, பாண்டுரங்கர் - ரகுமாயி, முக்தீஸ்வரர், அனந்த சயனத்தில் பெருமாள், அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, காகபுஜண்டர், பகுளாதேவி, பதினெண் சித்தர்கள், தன்வந்திரி பகவானுக்கு சன்னதிகள் உள்ளன. சாந்தமான முகத்துடன் பாசக்கயிறு இல்லாமல் உள்ள எமதர்மர், சித்திரகுப்தரும் தரிசிப்போருக்கு மன அமைதி, நிம்மதியைத் தருவதோடு முக்தியையும் அருள்கின்றனர். காலசக்கரத்தை இயக்கும் காலாதீஸ்வரர் நடுவில் இருக்க, சுற்றியுள்ள மண்டபங்களில் 9 கிரகங்கள், 12 ராசி நாயகர்கள், 27 நட்சத்திர தேவதைகளும் இருப்பது விசேஷம். நட்சத்திரம், ராசி, கிரகம் மற்றும் திசைக்குரிய மரங்களை தெரிந்து கொள்வோம்.நட்சத்திரத்திற்கு உரிய மரம் - 27அசுவினி - எட்டி, பரணி - நெல்லி, கார்த்திகை - ஆத்தி, ரோகிணி - நாவல், மிருகசீரிடம் - கருவேலம், திருவாதிரை - வெள்வேல், புனர்பூசம் - மூங்கில், பூசம் - பலாசு, ஆயில்யம் - புன்னை, மகம் - ஆல், பூரம் - பலாசு, உத்திரம் - அரளி, அஸ்தம் - அத்தி, சித்திரை - வில்வம், சுவாதி - மருது, விசாகம் - விளா, அனுஷம் - மகிழம், கேட்டை - பிராய், மூலம் - மரா, பூராடம் -- வஞ்சி, உத்திராடம் - பலா, திருவோணம் - தேக்கு/எருக்கு, அவிட்டம் - வன்னி, சதயம் - கடம்பு, பூரட்டாதி - மா/தேற்றான், உத்திரட்டாதி - வேம்பு, ரேவதி - இலுப்பை. ராசிக்கு உரிய மரம் - 12மேஷம் - ஓரிதழ் தாமரை, ரிஷபம் - நிலவாகை, மிதுனம் - நத்தைச்சூரி, கடகம் - விஷ்ணுகிரந்தி, சிம்மம் - கருடன் கிழங்கு, கன்னி - அவுரி, துலாம் - நெருஞ்சில், விருச்சிகம் - சிவனார்வேம்பு, தனுசு - கோபுரந்தாங்கி, மகரம் - கொழிஞ்சி, கும்பம் - நாயுருவி, மீனம் - கீழாநெல்லிநவக்கிரக மரங்கள் - 9சூரியன் - வெள்ளெருக்கு, சந்திரன் - பலாசு, செவ்வாய் - கருங்காலி, புதன் - நாயுருவி, குரு - அரசு, சுக்கிரன் - அத்தி, சனி - விடதாரி, ராகு - சடைப்புல், கேது - தருப்பை.திசைக்கு உரிய மரங்கள் - 8வடக்கு - நாயுருவி, துளசி, முல்லை வடகிழக்கு - மல்லி, திருநீற்றுப்பச்சிலை, வெண்தாமரை. கிழக்கு - செம்பருத்தி, சூரியகாந்தி, வாழை. தென்கிழக்கு - அத்தி, பலா, வஞ்சி, சந்தனம். தெற்கு - வில்வம், மா, கருங்காலி தென்னை. தென்மேற்கு - புளி, மருது, கடம்பு, தேக்கு, சிறியாநங்கை. மேற்கு - வன்னி, மகிழ். வடமேற்கு - நாவல், வேம்பு, புங்கு.கிரகங்கள், ராசிகள், நட்சத்திரத்திற்கான மூலிகை, மரம், செடிகள் அனைத்தும் தலவிருட்சங்கள் இக்கோயிலில் இருப்பது ' ஒரே கோயிலில் இத்தனை தலவிருட்சங்களா?' எனக் காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. கலியுகத்தின் முடிவில் தீமை அழிந்து நல்லவர்கள் வாழும் சத்ய யுகம் பிறக்கும் என்ற அடிப்படையில் உருவான முக்தி நிலையத்தை நாமும் வழிபடுவோம். எப்படி செல்வது: மதுரையில் இருந்து 25 கி.மீ., தொலைவில் திருமங்கலம். அங்கிருந்து விருதுநகர் செல்லும் வழியிலுள்ள ராயபாளையம் விலக்கில் கோயில் உள்ளது.நேரம் : காலை 8:00 - இரவு 8:00மணிதொடர்புக்கு: 94430 32619-முற்றும்ஜெ.ஜெயவெங்கடேஷ்98421 67567இந்த தொடரை புத்தகமாக பெற 1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்.