உள்ளூர் செய்திகள்

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனேஸ்வரர்

நந்திதேவர் அவதரித்த தலம், பார்வதியின் 51 சக்தி பீடங்களில் சைல சக்தி பீடம், சித்தி, புத்தியை விநாயகர் மணந்த திருத்தலம் என பல பெருமைகளைக் கொண்டது ஸ்ரீசைலம். ஜோதிர்லிங்க தலத்தில் ஒன்றாகவும், தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும் உள்ள இக்கோயில் ஆந்திரப்பிரதேசம், நந்தியால் மாவட்டத்தில் உள்ளது. சிலாதர் என்னும் மகரிஷி குழந்தை வரம் வேண்டி தவமிருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்னும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஒருமுறை குழந்தைகளைக் காண வந்த சனகாதி முனிவர்கள், ' குழந்தையான நந்தி சிலகாலம் மட்டுமே இந்த பூமியில் வாழ்வான்' என தெரிவித்தனர். தந்தையான சிலாதர் மிகவும் வருந்தினார். இதையறிந்த நந்தி, 'தந்தையே... கலங்காதீர்கள். தவம் இருந்து சாகாவரம் பெறுவேன்' என சபதமிட்டு அதன்படியே தவசக்தியால் சிவனுக்கு வாகனமாக மாறும் பேறு பெற்றார். கைலாய மலையில் தன் அனுமதியின்றி யாரும் சிவனை பார்க்க முடியாது என்றும் வரம் பெற்றார். இதற்கிடையில் நந்திதேவரின் தம்பி பர்வதனும் தவத்தில் ஈடுபட்டு பர்வத மலையாக மாறினார். இந்த பர்வத மலையின் உச்சியில் மல்லிகார்ஜுனேஸ்வரர் என்னும் பெயரில் சிவன் கோயில் கொண்டார். கிழக்கு நோக்கிய கோயிலில் நான்கு புறமும் வாசல்கள் உள்ளன. வாசல் அருகிலுள்ள மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது. நந்தி தவம் செய்த இடமான 'நந்தியால்' மலை அடிவாரத்தில் உள்ளது. முன்பு மல்லிகாபுரி என்னும் இப்பகுதியை ஆட்சி செய்த சந்திரகுப்தனின் மகளான சந்திரரேகா மல்லிகைப் பூவால் சிவனை பூஜித்தாள். இதனால் சுவாமிக்கு 'மல்லிகார்ஜுனர்' எனப் பெயர் ஏற்பட்டது. இவருக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்யலாம். இவரை ஒருமுறை தரிசித்தால் கங்கையில் இரண்டாயிரம் முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல ஆண்டு தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாலும் கிடைக்கும் புண்ணியம் நம்மைச் சேரும். அம்மனின் திருநாமம் பிரமராம்பாள். அம்மன் சன்னதிக்குச் செல்ல 30 படிகள் ஏற வேண்டும். துறவிகள், யோகிகள் தவம் செய்வதால் இத்தலத்திற்கு 'தட்சிண கைலாசம்' என பெயருண்டு. கிருத யுகத்தில் இரணியனும், திரேதாயுகத்தில் ஸ்ரீராமரும், துவாபர யுகத்தில் பாண்டவர்களும், கலியுகத்தில் ஆதிசங்கரரும், சத்ரபதி சிவாஜியும் பூஜை செய்துள்ளனர். ஸ்ரீபர்வதம், ஸ்ரீநகரம், ஸ்ரீகிரி, ஸ்ரீசைலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் இத்தலத்திற்கு வந்தால் மோட்சம் கிடைக்கும். எப்படி செல்வது: சென்னையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை NH16 வழியாக 462 கி.மீ., விசேஷ நாள்: மஹா சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம், பிரதோஷம். நேரம்: அதிகாலை 5:00 - 3:00 மணி; மாலை 5:30 - 10:00 மணிதொடர்புக்கு: 08524 - 288 881, 887, 888அருகிலுள்ள தலம்: அகோபிலம் பிரகலாத வரதன் கோயில் 223 கி.மீ., (எண்ணியது நிறைவேற...)நேரம்: காலை 6:30 - 1:00 மணி; மதியம் 3:00 - 8:00 மணிதொடர்புக்கு: 08519 - 252 025