உள்ளூர் செய்திகள்

காமாட்சிக்கு கல்யாணம்

பெங்களூரு சிவாஜி நகரில் உள்ளது ஏகாம்பரேஸ்வரர் தர்மராஜா கோயில். இங்கு மூலவராக காமாட்சியம்மனுடன் ஏகாம்பரேஸ்வரர் இருக்கிறார். இங்கு பங்குனி உத்திரத்தன்று (மார்ச் 25, 2024) காமாட்சியம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பல்லவர் பாணியில் அமைந்த இக்கோயிலில், மூலவர் ஏகாம்பரேஸ்வரர் சாளகிராமக்கல்லால் ஆனவர். 250 ஆண்டுகளுக்கு முன்பு காசியில் இருந்து வரவழைக்கப்பட்ட இவர் கிழக்கு நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். காமாட்சியம்மன் தெற்கு நோக்கி உள்ளார். கோயிலின் முகப்பு மண்டபத்தில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், தில்லை வனத்தில் தவம் புரியும் முனிவர்களுக்கு தரிசனம் தரும் நடராஜரின் தாண்டவமும் சுதை சிற்பங்களான உள்ளன. சுவாமி சன்னதியின் முன்மண்டபத்திலுள்ள சபதக் காளி, ஏகபாத மூர்த்தி, கண்ணப்ப நாயனார், ஏகம்ப மூர்த்தி சிற்பங்கள் சிறப்பானவை. விநாயகர், அவ்வையார், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, பிரம்மா, பைரவர் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன. செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் (காலை 10:30 - 12:00 மணி) துர்கையம்மனுக்கு பூஜை நடக்கிறது. இப்பகுதியில் பூர்வீகமாக வாழும் தெலுங்கு மக்களின் குலதெய்வமான தர்மராஜா, திரவுபதியம்மன் கோயில் தனிமண்டபத்தில் உள்ளது. பாண்டவர்களான தர்மர், பீமர், அர்ஜூனர், நகுலர், சகாதேவர் ஆகிய ஐவரும் திரவுபதியுடன் சுதை சிற்பங்களாகவும் உள்ளனர். ஏகாம்பரேஸ்வரர் தர்மராஜா கோயிலுக்கு அருகில் மதுரை மீனாட்சியம்மன், காசி விஸ்வநாதர் கோயில்கள் உள்ளன. காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி அம்மன்களை ஒரே நாளில் தரிசித்தால் விருப்பம் நிறைவேறும். பவுர்ணமி அல்லது திங்கட்கிழமையன்று காமாட்சியம்மனை தரிசித்தால் மனக்கவலை தீரும். உடல்நலம், மனபலம் சிறக்கும். எப்படி செல்வது: பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து ௫ கி.மீ.,விசேஷ நாள்: ஆனித்திருமஞ்சனம், ஆடிப்பூரம், ஆவணிமூலத்தன்று பிட்டுக்கு மண் சுமந்த லீலை, பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்.நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 5:00 - 8:30 மணிதொடர்புக்கு: 080 - 2559 5866அருகிலுள்ள தலம்: காசி விஸ்வநாதர் கோயில் 1 கி.மீ., (பாவம் தீர...)நேரம்: காலை 6:30- - 12:00 மணி; மாலை 5:00 - - 8:00 மணிதொடர்புக்கு: 96325 06092