சனாதன தர்மம் - 34
சிவனின் நண்பர்எல்லாம் வல்ல கடவுளே! நீயே என் தாய் என் தந்தை, உறவினர்கள், தோழன், கல்வி, செல்வம், ஏன் எல்லாமே நீ தான்! அமைதி! அமைதி! என்கிறது உபநிடத மந்திரம். சனாதன தர்மத்தில் கடவுளை எங்கோ துாரத்தில் வைத்துப் பார்ப்பது கிடையாது. கடவுளைத் தாயாகத் தந்தையாக, குழந்தையாக, நண்பனாகப் பார்க்கும், பழகும் தன்மை உண்டு. ஏன் கடவுளை எதிரியாகப் பார்ப்பவர்களும் உண்டு. கடவுளே இல்லை எனச் சொல்லும் உரிமையும் இங்கே வேதகாலம் முதல் உண்டு. இதற்கு நிரீச்வர வாதம் என்று பெயர். இத்தகைய உரிமை வேறு எங்கும் கிடையாது. வழிபாடு செய்தாலும் நல்லது. கோயில் பக்கமே ஒதுங்க மாட்டேன் எனச் சொன்னாலும் கவலையில்லை. சுதந்திரமான மதம் ஹிந்து மதம். தொண்டு செய்யும் நெறிமுறைக்கு தாச மார்க்கம் அல்லது சரியை என பெயர். நால்வரில் இதைப் பின்பற்றியவர் திருநாவுக்கரசர் நாயனார். அடுத்து சற்புத்திர மார்க்கம் அதாவது பூஜை வழிபாட்டு முறைகள் வழியாக கடவுளை அடைதல். இதற்கு கிரியை எனப் பெயர். இதை பின்பற்றியவர் திருஞானசம்பந்தர். தொடர்ந்து சகமார்க்கம். அதாவது தோழமை மார்க்கம். அதாவது தோழமையுடன் கடவுளை அணுகுவது. இதற்கு யோக மார்க்கம் என்று பெயர். இந்த நெறிப்படி வாழ்ந்தவர் சுந்தரர். நான்காவதாக சன்மார்க்கம். அதாவது ஞானநெறி. மேற்கண்ட வழிகளின் நிறைவு நிலை. இதன்படி வாழ்ந்து காட்டியவர் மாணிக்கவாசகர். இந்த நான்கு வழிமுறைகளில் தோழ மார்க்கத்தைக் கடைபிடித்தவர் சுந்தரர். இவரிடம் சிவனே அடியெடுத்துக் கொடுத்து, 'எம்மைச் சொற்றமிழால் பாடுக' என்றான். துாமறை பாடும் வாயோன் என்றார். வேதங்களை ஓதும் ஈசனின் திருவாக்கால் சுந்தரரை நோக்கி, 'நீ இந்த பூமியில் நல்ல தமிழால் என்னைப் பாடுக' எனப் பணித்தார். பித்தா... பேயா எனத் திட்டிய வாயால் எவ்வாறு பாடுவது எனக் கேட்க அதையே முதலாக வைத்துப் பாடுவாயாக என சிவன் பணித்தார். எனவே 'பித்தா! பிறைசூடி! பெருமானே அருளாளா!' எனப் பாடத் தொடங்கினார் சுந்தரர். கடவுளுடன் இவர் தோழமையாக பழகியதால் 'தம்பிரான் தோழர்' எனப்பட்டார். அன்ன தானம் செய்திட வேண்டி சிவனிடம் செல்வம் கேட்டார். திருமுதுகுன்றம் என்னும் விருத்தாச்சலத்திற்கு வரச் செய்து பன்னிரண்டாயிரம் பொன் கொடுத்தார். உடனே இதை திருவாரூர் எடுத்துச் செல்ல வேண்டும். போதுமான பாதுகாப்பு இல்லை என்ன செய்வது எனக் கேட்டார். உடனே சிவனும், 'இதை இங்கு ஓடும் மணிமுத்தாற்றில் போட்டு விட்டு திருவாரூர் கமலாலயக் குளத்தில் எடுத்துக் கொள்வாயாக' என அருள்புரிந்தார். ஓரிடத்தில் செல்வத்தைப் போட்டு பிரிதோர் இடத்தில் எடுத்துக் கொள்ளும் முறையான (ஏ.டி.எம்.,) ஒன்பதாம் நுாற்றாண்டிலேயே சுந்தரருக்காக வழங்கி விட்டார் சிவன். ஆம். சுந்தரரும் விருத்தாசலத்தில் உள்ள மணிமுத்தாற்றிலே பன்னிராயிரம் பொன்னைப் போட்டு விட்டு திருவாரூரில் உள்ள கமலாலயத்தில் எடுத்துக் கொண்டார். இதைப் போல மற்றொரு சம்பவம் நடந்தது. திருப்புகலுார் சிவன் மீது பாடல் பாடிய போது, 'அற்ப மனிதர்களைப் பாடாமல் என்றும் புகழுடன் விளங்கும் திருப்புகலுார் சிவனைப் பாடுங்கள்' என்றார். அன்றிரவு இத்தலத்தில் தங்க நேர்ந்தது. அங்கிருந்த சில செங்கற்களை அடுக்கி அதன் மீது தன் மேல் துண்டை விரித்து தலையை வைத்துப் படுத்தார். காலையில் எழுந்த போது செங்கல் அனைத்தும் தங்கக் கற்களாக மாறி இருந்தன. அதிசயித்த சுந்தரர் அதை எடுத்து திருவாரூரில் அன்னதானம் செய்ய அடியவர்களிடம் கொடுத்தார். சிவத்தலங்களை தரிசித்தபடியே திருக்குருகாவூர் என்னும் தலத்திற்கு அடியவர்களுடன் வந்தார் சுந்தரர். நீண்ட நேரம் நடந்து வந்ததால் சுந்தரர் உள்ளிட்ட அடியவர்கள் பசியால் சோர்ந்தனர். அதற்காக சிவன் வரும் வழியில் நிழற்பந்தல் வைத்து உணவும், குளிர்ந்த நீரும் அளித்து களைப்பை நீக்கினார். அனைவரும் சாப்பிட்ட மயக்கத்தில் சற்றுத் துாங்கி விட்டு எழுந்த போது அங்கு யாரையும் காணவில்லை. இதுவும் சிவனின் அருள் என்பதை உணர்ந்தார். 'பாடுவார் பசி தீர்ப்பார், பரவுவார் பிணி களைவார்' எனப் பாடி மகிழ்ந்தார். திருவாரூரில் அடியவர்களைப் புகழ்ந்து பாடும்படி சிவன் பணித்தார். பெருமை மிக்க அடியார்களை எப்படி பாட இயலும் எனக் கலங்கி நின்றார். 'தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்' என்று முதல் அடியை எடுத்துக் கொடுத்தார் சிவன். அதைப் பற்றிக் கொண்டு எல்லா அடியார்களையும், தொகை அடியார்களையும் பாடியருளினார். அதற்கு 'திருத்தொண்டத் தொகை' என பெயர் வந்தது. இதை முதலாகக் கொண்டு நம்பியாண்டார் நம்பி என்பவர் திருத்தொண்டர் திருவந்தாதி பாடினார். இவை இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார், 'பெரிய புராணம்' படைத்தார். இன்று நமக்கு அறுபத்து மூவர் வாழ்க்கை வரலாறு கிடைக்க அடித்தளமிட்டவர் சுந்தரரே. இவரது மனைவியின் ஊடலைத் தீர்ப்பதற்காக தானே திருவாரூர் வீதிகளில் ஒருமுறைக்கு இருமுறை நடந்து தம்பதியைச் சேர்த்து வைத்தார் சிவன். என் பிழைகளை எல்லாம் பொறுத்ததோடு, தோழனாகவும் ஏற்ற சிவனின் கருணை அளவிட முடியாதது என பாடிப் பரவுவார். இவரின் தலப் பயணங்களில் தற்போது அவிநாசி எனப்படும் 'திருப்புக்கொளியூர்' என்னும் தலத்திற்கு வந்து சேர்ந்தார். கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒருபுறம் மங்கல ஓசையும், மறுபுறம் அழுகை ஒலியும் கேட்டன. சாதாரண மனிதர்கள் மங்கல ஒலி வரும் இடத்திற்குச் சென்று வாழ்த்தி விட்டுச் சென்று விடுவர். ஆனால் கருணையுள்ள மகான்களோ துன்பத்தில் இருப்பவர் பக்கமே சென்று துயர் துடைப்பார்கள். அப்படித்தான் சுந்தரரும் அழும் ஒலி வரும் இல்லம் நோக்கிச் சென்றார். சுந்தரரிடம் ''சுவாமி... இந்த வீட்டின் பையனும், எதிர் வீட்டின் பையனும் சில ஆண்டுகளுக்கு முன்பாக கோயில் குளத்தில் விளையாடினர். எதிர்பாராத விதமாக இந்த வீட்டுப் பையனை அங்கிருந்த முதலை விழுங்கியது. இப்போது அவனும் உயிரோடு இருந்திருந்தால் எதிர் வீட்டுப் பையனுக்கு நடைபெறும் பூணுால் அணிவிப்பு நிகழ்ச்சி போல இவனுக்கும் நடைபெறுமே என வருந்தி அந்த வீட்டினர் அழுதனர். அந்த பையனின் பெற்றோரை அவிநாசியப்பர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார் சுந்தரர். குளக்கரையில் நின்றபடி, ''இந்த அடியவரின் குறையைத் தீர்க்க வேண்டியது உன் கடமையன்றோ! எனவே எமதர்மனிடம் சொல்லி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குழந்தையை மீண்டும் தரச் சொல்வாயாக'' என உரிமையுடன் பாடினார்.என்ன அதிசயம்! மழை பெய்தது. குளத்தில் நீர் நிரம்பியது. முதலை வெளியே வந்தது. ஏழு ஆண்டுகளில் என்ன வளர்ச்சியோ அதே வளர்ச்சியுடன் முதலை வாயில் இருந்து சிறுவன் வெளியே வந்தான். பெற்றோரும், உற்றாரும், மக்களும் மகிழ்ந்தனர். கடவுளின் கருணைக்கு நன்றி சொல்லி வணங்கிப் புறப்பட்டார் சுந்தரர். கோயில் துாணில் இந்த சம்பவம் சிற்பமாக உள்ளது. சிவனைத் தோழனாகக் கொண்ட சுந்தரர் தமிழால் பாடிப் பரவி சமுதாயத் தொண்டாற்றினார். சனாதனம் கடவுளைப் போற்றுவதில் பலவழிகளைக் காட்டுகிறது. இந்த அற்புத நெறிமுறைகளைக் கொண்டு கடவுளின் அருளைப் பெற்று சமுதாயத் தொண்டு செய்து வாழ்வோமாக. -தொடரும்இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்93617 89870