உள்ளூர் செய்திகள்

ஐயப்பன் கோயிலுக்குப் போகிறீர்களா ? திருவேட்டக்குடியில் மாலை போடுங்க !

 திருமண பாக்கியம் மற்றும் குழந்தை வரம் வேண்டி ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் சாஸ்தா சன்னதியுடன் கூடிய  காரைக்கால்  அருகிலுள்ள திருவேட்டக்குடி  சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று மாலையணிந்து சென்று வரலாம்.தல வரலாறு: மகாபாரத போரின்போது பாண்டவர்களும், கவுரவர்களும் சமஅளவு வீரத்துடன் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது வேதவியாசர் அர்ஜுனனிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனனை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ஜுனன் இத்தலத்திற்கு வந்து சிவனை வேண்டி தவமிருந்தான். அவனது தவத்தை கலைப்பதற்காக முகாசுரனை அனுப்பினார் துரியோதனன். பன்றி வடிவில் வந்த அசுரன் அவரது தவத்தை கலைக்க முயன்றான். அர்ஜுனர் அசுரனை அம்பால் வீழ்த்தினார். அப்போது ஒரு வேடன் தன் மனைவி, மகனுடன் அங்கு வந்து பன்றியை தான் வீழ்த்தியாக கூறி எடுத்துச்செல்ல முயன்றார். அர்ஜுனன் அவரிடம் பன்றியை  தர மறுத்தார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவன், தானே வேடன் வடிவில் வந்ததை உணர்த்தி, பாசுபத அஸ்திரம் கொடுக்கச் சென்றார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், ""ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ஜுனன் தகுதிபெற்றவன்தானா?'' என்றாள் சந்தேகத்துடன். சிவன் அவளிடம், ""அர்ஜுனன் "மஸ்யரேகை' (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்,'' என்றார். அர்ஜுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினாராம். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அவனிடம் கொடுத்தார்.அர்ஜுனன் தனக்கு அருள் செய்ததைப்போல இங்கிருந்து அருளும்படி வேண்டவே சிவன் எழுந்தருளினார்.மாப்பிள்ளை சிவன்: ஒருசமயம் கைலாயத்தில் பார்வதிதேவி சிவனிடம், ""நான் இல்லாமல் உங்களால் தனித்து இயங்க முடியாதே!'' என்றாள். உடனே சிவன், அவளை இத்தலத்தில் மீனவப்பெண்ணாக பிறக்கும்படி செய்தார். சிவன் மீது பக்தி கொண்டு தவமிருந்தாள். சிவனும், மீனவராக வந்து அம்பாளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில் மாசி திருவிழாவின்போது, சிவனை மீனவர்கள் இங்கிருந்து தங்கள் பகுதிக்கு அழைத்துச்சென்று "மாப்பிள்ளை அழைப்பு' கொடுக்கின்றனர்.  இவரிடம் வேண்டிக்கொண்டால் திருமண தோஷங்கள் நீங்கும், விரைவில் வரன் அமையும் என்பது நம்பிக்கை. வில் ஏந்திய வேலவர்: இங்கு உற்சவர் வேடமூர்த்தி கையில் வில் மற்றும் சூலம் ஏந்தியும், அம்பாள்  தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தருவது வித்தியாசமான தரிசனம். சிவன் வேடராக வந்தபோது, அவருடன் முருகனையும் அழைத்து வந்தாராம். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம். திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய சிவன், பிரகாரத்தில் தனிச்சன்னதியில் "புன்னைவனநாதராக' அருளுகிறார். இவரது சன்னதியின் முன்புறம் சனீஸ்வரர், சம்பந்தர் இருவரும் இருக்கின்றனர். கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.கோயில் அமைப்பு: கருவறையில் சிவன், லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். சிவனிடம் பாசுபத அஸ்திரம் பெற்ற அர்ஜுனன், கையில் சூலம், வில்லுடன், ருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார். விழாக்காலங்களில் இவருக்கும் பூஜைகள் நடக்கிறது. அம்பாள் தனிசன்னதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கிறாள். சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை, "சாந்தநாயகி' என அழைக்கின்றனர். பிரச்னைகளால் பிரிந்திருக்கும் தம்பதியர்கள் இவளுக்கு வஸ்திரம் சாத்தி, பூஜைகள் செய்து வணங்குகின்றனர். திருஞானசம்பந்தர் காரைக்கால் செல்லும் முன்பு, இத்தலத்திற்கு கடல் வழியாக வந்தார். அவர் படகில் இருந்து இறங்க முயன்றபோது, கரையில் மணல்கள் எல்லாம் லிங்கமாக தெரிந்தது. எனவே, அவர் கடலில் நின்றே சுவாமியைப் பற்றி பாடிவிட்டு சென்றுவிட்டார். சிவன், வேடன் வடிவில் வந்ததால் இவ்வூர் "வேட்டக்குடி' என்றும், அம்பாள், மீனவப்பெண்ணாக பிறந்த தலம் என்பதால், "அம்பிகாபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது. பிரகாரத்தில் நடராஜர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன.சாஸ்தா சன்னதி: கிரகதோஷம் உள்ளவர்களுக்கு திருமணத்தடை ஏற்படுவது சகஜம். இவர்கள் சனிக்கிழமைகளில் சாஸ்தாவை வழிபட்டால் தடை நீங்கும். இவ்வகையில், திருமணவரம் வேண்டியும், குழந்தை பாக்கியத்துக்காகவும் ஐயப்பன் கோயிலுக்கு வேண்டுதல் வைத்துச் செல்லும் பக்தர்கள், இங்குள்ள பூர்ண புஷ்கலா சமேத சாஸ்தா (ஐயப்பன்) சன்னதியைத் தரிசித்து, இங்கேயே மாலை அணிந்து சென்றால், சக்தி மிக்க இந்த சாஸ்தா அதற்குரிய பலனைத் தருவார் என்பது நம்பிக்கை.பூஜை நேரம்: காலை 6- 12 மணி, மாலை 4- 8 மணி.இருப்பிடம்: காரைக்காலில் இருந்துபொறையார் செல்லும் வழியில் 6 கி.மீ., தூரத்தில்வேட்டக்குடி உள்ளது. பஸ் ஸ்டாப்பில் இருந்து சுமார் 1 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.போன்: 04368-  265 693, 265 691.