ஆத்தா முத்துமாரி எங்க மனசை குளிர வை தாயே!
கொளுத்துகிற பங்குனி வெயிலில், 'எங்கள் உள்ளங்களை குளிர வை முத்துமாரித்தாயே!' என்று பக்தர்களெல்லாம் கோஷமிட்டு பொங்கலிடும் பங்குனி திருவிழா சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் விசேஷம்.தல வரலாறு:தாயமங்கலத்தில் ஏழு தலைமுறைக்கு முன் வசித்த வணிகர் முத்துச்செட்டியார், வியாபாரத்திற்காக மதுரை சென்று வருவார். மீனாட்சியம்மன் பக்தரான அவருக்கு குழந்தை இல்லை. அம்மனிடம் தனது குறை தீர்க்கும்படி வேண்டுவார். ஒருசமயம் மதுரையில் இருந்து ஊர் திரும்பியபோது, வழியில் ஒரு சிறுமி தனியே நின்று அழுது கொண்டிருந்தாள். அவளை பரிவுடன் விசாரித்தார். குழந்தை இல்லாத தனக்கு மீனாட்சியே குழந்தையாக வந்ததாக எண்ணி தன்னுடன் அழைத்து வந்தார். இங்குள்ள குளக்கரையில் குழந்தையை அமர வைத்துவிட்டு, நீராடச் சென்று திரும்பினார். குழந்தையைக் காணவில்லை. வீட்டிற்குச் சென்று மனைவியிடம் நடந்ததை வருத்தத்துடன் கூறினார். அன்றிரவில் வணிகரின் கனவில் தோன்றிய அம்பிகை, தானே குழந்தையாக வந்ததை உணர்த்தினாள். மேலும், கற்றாழைக் காட்டில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி அங்கு தனது பாதச்சுவடு இருப்பதாகச் சொன்னாள். அதன்படி அங்கு சென்ற வணிகர், சுவடு இருந்த இடத்தில் கிடந்த மண்ணை பிடித்து வைத்து கோயில் எழுப்பினார். பிற்காலத்தில் சிலை வடித்து கோயில் பெரியளவில் கட்டப்பட்டது. அம்பிகைக்கு 'முத்து மாரியம்மன்' என்று பெயர் சூட்டப்பட்டது.கன்னி அம்மன்:முத்து மாரியம்மன் நான்கு கரங்களிலும், உடுக்கை, கத்தி, சூலம், அக்னி ஏந்தியிருக்கிறாள். தலையில் அக்னி கிரீடம் உள்ளது. சிறுமியாகவந்ததால் இவளை கன்னித்தெய்வமாக வழிபடுகிறார்கள். எனவே திருமண பாக்கியத்திற்காக வேண்டுவோர், அம்பாளுக்கு மாங்கல்யம் கட்டாமல், தங்கத்தில் பொட்டு செய்து, அதை அவளது பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர். பல கிராம மக்களுக்கு அம்பிகை, தாயாக இருந்து அருள்புரிகிறாள். இதனால், 'தாய்மங்கலம்' எனப்பட்ட இத்தலம் 'தாயமங்கலம்' என மருவியதாகச் சொல்கிறார்கள். அம்மை கண்டு குணமடைந்தோர் ஆயிரம் கண் பானை, அக்னிச்சட்டி எடுக்கின்றனர்.பிற சந்நிதிகள்:கோயில் முகப்பில் விநாயகர், முருகன் உள்ளனர். பிரகாரத்தில் கருப்பணர், சின்னக்கருப்ப சுவாமி, காளியம்மன், ஆதிமுத்துமாரி, அனுக்ஞை விநாயகர், சுப்பிரமணியர், காலபைரவர் உள்ளனர். கோயிலுக்கு அருகில் மாரியம்மன் தீர்த்தம் உள்ளது.திருவிழா சிறப்பு:பங்குனி 15ம் தேதி (இவ்வாண்டு மார்ச்28) காப்பு கட்டி விழா துவங்கும். இதற்கு முந்தைய ஒரு நல்ல நாளில் கோயில் வளாகத்தில் கைப்பிடியளவிற்கு மண் எடுத்து, அதையே அம்பாளாகக் கருதி பூஜை செய்வர். முதலில் பிடிமண் வைத்து வழிபாடு துவங்கியதன் அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர். இதனால், விழா அம்பிகையின் அருளால் குறையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை. பங்குனி 19ல் (ஏப்.1)பூக்குழி வைபவம், 23ல் (ஏப்.5)தேர், 24ல் (ஏப். 6)பால்குட ஊர்வலம், 25ல் (ஏப்.7)தீர்த்தவாரியுடன் விழா நிறைவடையும். விழா நாட்களில் மட்டுமின்றி, பங்குனி முழுவதுமே மக்கள் பொங்கலிட்டு வழிபடுவர்.பிரார்த்தனை:விவசாயம் செழிக்க, குடும்பம் சிறக்க சிறப்பு பூஜை, பிரகாரத்திலுள்ள வில்வ மரத்தில் குழந்தை பாக்கியத்திற்காக தொட்டில் கட்டுதல், வயிற்று நோய் தீர மாவிளக்கு, கண் நோய் நீங்க கண்மலர் காணிக்கை செலுத்துகின்றனர். அம்மை தீர அபிஷேக தீர்த்தம் தரப்படுகிறது. குழந்தை பிறந்ததும் கரும்புத்தொட்டிலில் குழந்தையை படுக்க வைத்து கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து அம்பாள் சந்நிதி முன் படுக்க வைத்து பூஜை செய்வர்.இருப்பிடம்:சிவகங்கையில் இருந்து 22 கி.மீ., தாயமங்கலம் விலக்கில் இருந்து ஆட்டோ வசதியுள்ளது.திறக்கும் நேரம்:காலை 7 - இரவு 7.போன்:04564 206 614.