உள்ளூர் செய்திகள்

மனமே விழித்தெழு (18)

'உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்' என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். நாம் யார் என்பதை அறிய முயற்சிக்க வேண்டும். கடவுள் பல வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதை ஆன்மிகவாதிகள் 'தசாவதாரம்' என்பர். இதை ஏற்காத சிலர் மூடநம்பிக்கை என்பர். ஆனால் அப்படிப்பட்டவர் கூட பல வடிவங்களில் ஒரே மனிதர் இருப்பதை மையமாகக் கொண்டு வரும் கதைகளை விரும்பி படிக்கிறார்கள். ராபர்ட் லுாயிஸ் ஸ்டீவன்சன் என்பவரின் 'டாக்டர் ஜேக்கில் அண்ட் மிஸ்டர் ஹைட்' என்னும் நாவல் 1886ல் இங்கிலாந்தில் வெளியானது. மனிதனுக்குள் இரு குணம் கொண்டவர்கள் இருப்பதை கருவாக கொண்டு எழுதப்பட்ட கதை இது. இது போன்ற நாவல், திரைப்படத்தை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ.... உங்களுக்குள் ஒன்றுக்கும் அதிகமான நபர்கள் உள்ளனர் என்பதை நம்பத் தான் வேண்டும். அதை அறிவதற்கான பயிற்சியை தரப் போகிறேன். இப்பயிற்சிக்கு காகிதம், பேனா மற்றும் நெருங்கிய நண்பர் தேவை. முதலில் உங்களைப் பற்றிய வெளிப்படையான தகவல்களை நண்பரிடம் கேளுங்கள். உதாரணமாக உங்களின் நிறம், அணியும் சட்டை, பேண்டின் நிறம், தரம் போன்றவை. அவற்றை பேப்பரில் எழுதுங்கள். அவை அனைத்தும் உங்களுக்கும், நண்பருக்கும் தெரிந்த விஷயங்கள். இந்த நபர் தான் உங்களுக்குள் இருக்கும் நான்கு பேர்களில் முதலாவது நபர். இரண்டாவது, உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத விஷயங்கள் குறித்தவை. ஒருவேளை நண்பருக்கு தெரிந்திருக்கலாம். உதாரணமாக உங்களுக்கு அடிக்கடி கோபம் வருமா? என கேட்டால் 'வராது' என சொல்வீர்கள். ஆனால் உங்களுக்கு கோபம் வருவது மற்றவர்களுக்குத் தான் தெரியும். குறையை தெரிவித்தால் தவறாக நினைப்பீர்களோ என அவர்கள் சொல்லாமல் இருக்கலாம். உங்களைப் பற்றிய தகவல்களை நண்பர் வெளிப்படையாகச் சொல்லச் சொல்ல எழுதுங்கள். இவை குறையாகவும் அல்லது நிறையாகவும் இருக்கலாம். இந்த லிஸ்டில் இருப்பவர் தான் உங்களுக்குள் இருக்கும் இரண்டாவது மனிதர். மூன்றாவது சில விபரங்கள் நீங்கள் மட்டுமே அறிந்தவையாக இருக்கும். அவற்றை வெளியில் சொல்ல மாட்டீர்கள். இதனால் உங்களது இமேஜ் பாதிக்கப்படுமோ என்ற பயமே காரணம். உதாரணமாக இருட்டைப் பார்த்தால் பயம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் மற்றவரிடம் மறைத்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் அறிந்த இது போன்ற தகவல்களை நண்பருடன் பகிர்வதோடு, இது அவருக்குத் தெரியுமா என்றும் கேளுங்கள். 'தெரியாது' என நண்பர் சொன்னால் அவர் தான் உங்களுக்குள் இருக்கும் மூன்றாவது மனிதர்! உங்களைப் பற்றிய நான்காவது பகுதி தான் வினோதமானது. அது உங்களுக்கும் தெரியாது, நண்பருக்கும் தெரியாது! உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவர் மாரடைப்பு வந்து துரதிஷ்டவசமாக இறந்து கூட போயிருப்பார். அவருக்கு இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை இருப்பது தெரிந்திருந்தால் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றிருப்பார். அல்லது அவரது நண்பர் அல்லது உறவினருக்கு தெரிந்திருந்தால் கூட அவரைக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் விதி யாரை விட்டது?இந்த நான்கு நபர்களும் சேர்ந்தது தான் நீங்கள்! நாம் நினைக்கிறோம் எல்லாம் நமக்குத் தெரியும் என்று! ஆனால் நம்மையே நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்பதை இதன் மூலம் உணர்ந்திருப்பீர்கள்.இந்த பயிற்சியை 1955ல் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஜோசப் லப்ட் (Joseph Luft) ஹேரி இங்ஹேம் (Harry Ingham) என்ற இரு மனோதத்துவ நிபுணர்கள் வெளியிட்டனர். தன்னைத் தானே அறியவும், நம்மைச் சார்ந்தவர்களைப் பற்றி அறியவும், குழுவாக பணியாற்றுவோரிடம் மனித நேயம் வளரவும் 'ஜோஹாரி விண்டோ' (Johari Window) என்னும் இந்த தத்துவம் பயன்படுகிறது. வாழ்வில் முன்னேற வேண்டும் எனில், நான் யார்? மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? அது எனக்குத் தெரியுமா, அது தெரிந்தால் ஏற்படும் பயன் என்ன? என்பதைப் பற்றி மனதில் தெளிந்த சிந்தனை இருக்க வேண்டும். விழித்திருக்கும் போது மட்டுமே மனத்தெளிவும், அதனால் சீரான முன்னேற்றமும் ஏற்படும். சரி... நமக்குள் இருக்கும் இந்த நான்கு மனிதர்களுக்கும், மூன்று குணங்களுக்கும் இருக்கும் தொடர்பு பற்றிய அறிய ஒரு வாரம் பொறுத்திருங்கள்! தொடரும்அலைபேசி: 73396 77870திருவள்ளூர் என்.சி. ஸ்ரீதரன்